அலாரம்

காலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்ளும் வழக்கம் நான் எட்டாவது படிக்கும் போது ஏற்பட்டது. எட்டாவது வகுப்பில் படிக்கும் போது ஒரு முறை என் சித்தி வீட்டுக்கு சென்ற போது அங்கு கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோயில் முழுவதும் கடைகளாக நிறைந்திருந்தது. வித விதமான விளையாட்டுப் பொருள்களும், வீட்டுக்கு தேவையான பொருள்களும் திருவிழா கடைகளை அலங்கரித்திருந்தன.

சித்தப்பா எனக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் தருவதாகச் சொன்னார். பெரும்பாலான கடைகளை விளையாட்டு பொருட்களே நிறைத்திருந்தன. என்னுடைய சித்தப்பாவோ விளையாட்டு பொருள்களைத் தவிர என்ன வேண்டுமானாலும் கேள் வாங்கித் தருகிறேன் என்றார். வங்கியில் பணிபுரிந்து வந்த அவருக்கு விளையாட்டு பொருளை எனக்கு வாங்கி கொடுப்பதில் விருப்பமில்லை. கடைசியில் ஒரு மேஜை கடிகாரத்தை வாங்கிக் கொள்ளலாம் என தீர்மானித்தேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் எனக்கு வாங்கித் தந்தார்.

சிகப்பு நிறமுடைய அந்த கடிகாரம் ஒரு பூனையின் முகவடித்தை ஒத்திருந்தது. அது கீ கொடுத்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் ஒலி வழக்கமான இரும்பின் மீது அடிக்கும் போது ஏற்படும் ஒலி மாதிரியே இருந்தது. ஆனால் தற்போது அந்த கடிகாரத்தை வடிவமைத்திருந்தால் அந்த கடிகாரம் பேட்டரியால் இயங்கும் வகையில் அமைந்திருக்கும். அதன் ஒலியினைக் கூட பூனையின் ஒலியை ஒத்த ஒலியை ஒலிக்குமாறு வடிவமைத்திருப்பார்கள். அந்த கடிகாரத்தின் தலைப் பகுதியில் ஒரு புறத்தெரிவு (projection) இருக்கும். ஒருமுறை கீயை முழுவதுமாக கொடுத்து வைத்தால், அது தீர்ந்து போகும் வரை ஒலியெழுப்பிக்கொண்டே இருக்கும். கடிகாரம் ஒலித்துக்கொண்டிருக்கும் போது கடிகாரத்தின் தலைப்பகுதியிலுள்ள புறத்தெரிவை அழுத்தினால் ஒலி நின்றுவிடும். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அடிக்கும் snooze அப்போதய கடிகாரத்தில் இல்லை.

நான் என்னுடைய கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் அந்த கடிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த கடிகாரத்தை பயன்படுத்தும் போது அலாரம் அடித்த பின்பு தூங்கியது போன்று எனக்கு நினைவுகள் இல்லை. பி.எட் படிக்கும் போது கட்டுரை போட்டிக்கு பரிசாக ஒரு டிஜிட்டல் மேஜைக் கடிகாரம் கிடைத்தது. அதில் பல வகையான ஒலிகளை பயன்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தது. பறவைகளின் ஒலிகள், அருவியின் ஒலி, மழையின் ஒலி போன்ற பல ஒலிகள் இருந்தன. அதைவிட முக்கியமாக snooze என்ற பட்டனும் அதில் இருந்தது. Snooze ஐ அழுத்திவிட்டு தூங்கினால் ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் கழித்து நம்மை மீண்டும் எழுப்பி விடும்.

இந்த snooze வந்த பின்பு அடிக்கடி காலையில் அலாரம் அடித்த பின்பும் ”இன்னும் 5 நிமிடம் கூட தூங்கி விட்டு எழுந்து விடலாம்” என்ற சோம்பல் மனதுக்குள் துளிர்விட ஆரம்பிக்கிறது. ஒரே வாய்ப்புத் தான் என இருந்த போது வராத சோம்பல் எழும்ப இன்னொரு வாய்ப்பு இருக்கிறது என்ற சூழல் வரும் போது சோம்பலும் தானாக வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த டிஜிட்டல் கடிகாரம் வந்த பின் பல நாட்கள் snooze அழுத்திக் கொண்டே ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கியிருக்கிறேன். மூன்று முறை தான் snooze பட்டன் செயல்படும். மூன்று முறைக்குள் எழும்பவில்லை எனில் நாமாக எழும்பும் வரை தூங்க வேண்டியது தான்.

மொபைல் வந்த பின் இந்த மேஜைக் கடிகாரங்களின் பயன் மிகவும் குறைந்து விட்டது. இப்போது மொபைலில் நாம் விரும்பும் பாடல்களையோ அல்லது ஒலிகளையோ வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. நாம் விரும் பாடல்களை அலாரத்தின் ஒலியாக வைத்துப் படுப்பதால் சில வேளைகளில் அலாரம் காதுக்கு கேட்காமல் தூங்கிவிடுவதும் உண்டு.

நான் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை. உங்களிடம் ஒரு கேள்வியோடு தொடங்கலாம் என நினைக்கிறேன். அலாரம் வைத்து எழும்பும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா? அப்படி இருந்தால் snooze ஐ பயன்படுத்தாமல் நீங்கள் எழுந்து விடுவீர்களா? அல்லது snooze ஐப் பயன்படுத்தி தொடர்ந்து தூங்குவீர்களா? அல்லது அலாரம் அடிக்கும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு முன்னரே எழுந்து விடுவீர்களா?

இந்த கேள்விகளுக்கு பின்னால் ஒரு சிறிய உளவியல் மறைந்துள்ளது. தினமும் தூங்கும் போது ”நாளைக் காலையில் 5 மணிக்கு நான் எழுந்து கொள்வேன்” என்ற வாக்குறுதியை எனக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன். நான் 5 மணிக்கு எழுந்து கொண்டால் எனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்பது பொருள். வாக்குறுதிகளை நிறைவேறும் போது மகிழ்ச்சியை கொடுக்கும் ஹார்மோன்கள் என்னுடைய உடலில் உருவாகிறது. அது என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது. ஒரு புதிய காலை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் துவங்குகிறது. நிச்சயமாக அந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய இந்த நிகழ்வு அமையும்.

அதே நேரம் நீங்கள் அலாரம் அடிக்கும் போது snooze ஐ பயன்படுத்தி மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தால் நீங்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நீங்களே நிறைவேற்றவில்லை. நீங்கள் உணராவிட்டால் கூட அது உங்களுக்கு காலையில் உங்களுக்கு ஒரு ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஏமாற்றம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஹார்மோன்களை நமக்குள் உற்பத்திச் செய்யும். அது நம்முடைய மகிழ்ச்சிகரமான காலைக்கு தடையாக இருக்கும். இந்த தடை அன்றைய தினம் முழுவதும் நம்முடைய வேலைகலில் பிரதிபலிக்கும்.

அலாரம் அடிக்கும் 5 நிமிடங்களுக்கு அல்லது 10 நிமிடங்களுக்கு முன்னால் நீங்களாகவே எழும்ப முடிந்தால் அது உங்கள் மேம் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும். அது மேலும் மகிழ்ச்சி தரும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. அன்றைய நாளை மேலும் அழகுபடுத்துகிறது.

தூக்கத்தில் எழுவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அன்றைய நாளின் மொத்த செயல்பாட்டையும் பாதிக்கும் ஒரு மறைமுக காரணியாகவும் அது இருக்கிறது. அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நம்பிக்கைக்குரிய காலைகள் மலரட்டும்.

Bergin G Kadayal