நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவரா?
கடவுளின் செயல்..!
கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். வாழ்க்கையில் இன்பமோ, துன்பமோ எது நடந்தாலும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வார்.
இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டார். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவருடைய நம்பிக்கை. அதே ஊரில் தங்கராஜ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் அருணாச்சலத்திற்கு நேர் எதிராக இருப்பார்.
கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவர். இவரின் வசதிக்கு குறைவில்லை. அதனால், அருணாசலம் ஏழையாக இருப்பதால் பார்க்கும் போதெல்லாம் கிண்டல் செய்வார்.
நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை ஏழையாக வைத்துவிட்டார். ஆனால், என்னை பணக்காரனாக படைத்திருக்கிறார். பார்த்தாயா, என்று கிண்டல் செய்வார். அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார். இப்படியாக தங்கராஜ் கிண்டல் செய்வதும், அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தது.
ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்துக் கொண்டு தங்கராஜ் வந்து கொண்டிருந்தார். குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வியர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தார். வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தார். என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற, எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி, என்று நக்கல் செய்தார்.
வெயில் கொடுமை ஒரு பக்கம், தங்கராஜின் தொல்லை ஒரு பக்கம் என இரண்டும் சேர்ந்து அருணாச்சலத்தை எரிச்சல்படுத்தியது. அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது.
அதை கையில் வைத்துக்கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும் கிண்டல் செய்யாதே, என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் வேகமாக நடந்தார். பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே தங்கராஜ் நடந்தார்.
சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டார், அதற்குள் வெறி நாய் ஒன்று தங்கராஜை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை நாய் பயங்கரமாக துரத்தியது.
குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. அதனால், குடையை மடக்கி கையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி உயிர் தப்பித்தார். அப்பொழுதுதான் அவர் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தார். அவரை அறியாமலேயே ஒருவிதமான பயம் உணர்வு தங்கராஜ்-க்கு வந்துவிட்டது. பிறகு அன்றிலிருந்து கடவுளையும், அவரின் செயலையும் நம்ப ஆரம்பித்தார்.