ஒரே ராசி, ஒரே நக்ஷத்திரத்தில் திருமணம் செய்யலாமா?
பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. நான் இப்படி சொல்லக் காரணம், ஒரே ராசி – ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும். ஒரு உதாரணம் சொல்கிறேன். பையனுக்கு , அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நட்சத்திரம் என்பதால்) அதே போல் ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள். ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம். அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் (நல்ல கிரக சார் அதிர்ஷ்டத்தால்) குடும்பத்தை நடத்துவார். வண்டியும் ஓடும். அதை விட்டு, விட்டு இருவருக்கும் ஒரே சமயத்தில் மோசமான தசா பலன் வந்தால் குடும்பம் எப்படி ஓடும்? எப்படி நடக்கும். இதனால் தான் ஒரே ராசியிலோ, ஒரே ராசி – ஒரே நக்ஷத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.