கடக இலக்ன பொது பலன்கள்..!
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், வட்ட முகமும், இரட்டைத் தாடையும் உடையவராக இருப்பார். சிவந்த நிறமுடையவர், நல்ல தைரியசாலியாகவும், புத்திக் கூர்மை உடையவராகவும் இருப்பார். நடையிலும், ஊர் சுற்றுவதிலும் விருப்பமுடையவர். தன தான்ய விருத்தி உடையவர். தந்தையோடு அபிப்ராய பேதமுடையவர். குடும்பப்பாசம் உள்ளவர், குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவர். உணர்ச்சி வசப்படும் தன்மையுடையவர் அதனால் சில சமயங்களில் விசித்திரமாகவும் நடந்து கொள்வார்.
நாணயமுடையவர். நன்றாக பேசக்கூடியவர், நீதி நேர்மையை விரும்புபவராக இருப்பார். வியாபாரம் அல்லது பொருள்களின் உற்பத்தியில் இவர்களுக்கு அதிகமான ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிரமங்களைச் சந்திப்பார்கள். தீர்க்கமான ஆயுள் உண்டு. சபல குணமும், வித்தியாசமான கனவு காணும் திறனும் உடையவர்கள். கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களாக வாழ விரும்புவார்கள்.
சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர். சகஜமாகப் பழகுபவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள், துணிந்தபின் துக்கமில்லை என்றிருப்பவர்கள். இரக்ககுணம் கொண்டவர்கள், ஞாபக சக்தி உண்டு, இவர்களிடம் பழகுவது கடினம், பழகிய பின் பிரிய முடியாது. நண்பர்களை நம்பி ஏமாந்து போவார்கள், கள்ளம் கபடமின்றி வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவர்கள், பிறரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள். குளிர்ந்த கண்களும் மெதுவான பார்வையும் கொண்டவர்கள், புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள், ஏற்ற இறக்கமான பொருளாதார நிலை உண்டு. கடினமாகப் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுபவர்கள், கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், வீடு, மனை, வாகன யோகத்தை பூரணமாக அனுபவிப்பவர்கள், தாயாரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. அடங்காத ஆண்மகனைப் பெற்றிருப்பார்கள், எதிரிகள் குறைவு என்றாலும் அவர்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
கருத்து ஒற்றுமையோடு கூடிய களத்திரம் அமையாது, நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள், கூட்டுத்தொழிலில் தோல்விகளைச் சந்திப்பவர்கள், அநேக பந்துக்கள் உடையவர்கள், பந்துக்களால் பயனற்றவர்கள், நெருப்பு, நிலம், வியாபாரம், அரசியல், சமூக சேவை, விவசாயம், கொடுக்கல் – வாங்கல், ஆடை, ஆபரண பொருட்கள், கலை, நடிப்பு தூர தேசங்களுக்குச் சென்று தொழில் புரிதல், ஆராய்ச்சித்துறை, சமையல் கலை,சங்கீதம், ஓவியம், போலீஸ், இராணுவம் தொடர்பான தொழில்களில் அதிக ஈடுபாடு உண்டு. சிலருக்கு அரசு உயர் பதவிகளும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் ஜன வசீகரத்தைப் பெற்றவர்கள் என்றால் மிகையாகாது.