நவகிரகங்கள் மற்றும் அதற்குரிய மச்சங்களின் பலன்கள்
சூரியன்:-
உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் மங்கலான மஞ்சள் நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சூரியனின் அருளைப் பெற்றவர்கள். இவர்கள் பொதுவாக தைரியம் மிக்கவர்களாகக் காணப்படுவார்கள். எந்தப் பொறுப்பையும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும். எனினும், சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கலாம். இன்னும் சிலருக்கு காதல் கசக்கலாம். நாற்பது வயதிற்கு மேல் நன்றாக இருப்பார்கள். சிலருக்கு பித்த சம்மந்தமான வியாதிகள் வரலாம். பலர் உயர்ப்பதவியில் அரசு அதிகாரிகளாக இருப்பார்கள் என்கிறது சாமுத்ரிகா லட்சணம் என்னும் நூல்.
செவ்வாய்:-
ஒருவருடைய உடலில் உருவத்தில் பெரியதாகவோ, சிறியதாகவோ சிவப்பு நிற மச்சம் இருந்தால், அவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆட்சியை பெற்று இருப்பார்கள். அதிகத் துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். அதிகப் பிடிவாத குணம் இருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களில் பலர் போலீஸ், ராணுவம், தீயணைப்பு, மருத்துவம் போன்ற துறைகளில் இருக்கலாம். பல சாகசங்களை நிகழ்த்துவார்கள். ரத்தக் கொதிப்பு, ஜூரம் போன்ற நோய்களால் பிற்காலத்தில் பலர் அவதிப்படலாம்.
புதன்:-
உடலின் பகுதியில் பெரிதாகக் காணப்படும் மச்சம் மாநிறத்தில் இருந்தால் அத்தகையவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக அறிவாளியாக இருப்பார்கள். ஆராய்ச்சி மனப் பான்மை சிலருக்கு அதிகம் இருக்கும். வாக்கு சாதுர்யம் அதிகம் இருக்கும். பலர் உழைப்பால் முன்னேறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் அதிகமாக மகிழ்ச்சி இருக்காது. வாயுத் தொல்லை, நரம்புத் தளர்ச்சி நோய்கள் கூட சிலருக்கு பிற்காலத்தில் ஏற்படக் கூடும். ஒரு சிலர் ஜோதிடர்களாகவோ, ஆராய்ச்சியாளர்களாகவோ, விஞ்ஞானிகள் ஆகவோ, எழுத்தாளர் களாகவோ, கணித வல்லுனர்கள் ஆகவோ இருக்கலாம். சிலர் வேத வித்தகர்களாக இருப்பார்கள்.
குரு:-
உடலில் ஏதாவது ஒரு இடத்தில் நீல நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் பிற்காலத்தில் பருத்துக் காணப்படும். வட்ட வடிவமான முகம் கூட இருக்கலாம். ஆன்மீக சிந்தனை அதிகம் இருக்கும். சிறிது “தான்” என்ற அகந்தை இருக்கத் தான் செய்யும். நல்ல பெண் மனைவியாக அமைவாள். சொத்துக்கள் நிறைய வந்து சேரும். சட்ட வல்லுனர்களாகவும், இன்னும் சிலர் ஆசிரியர்களாகவும் இருப்பார்கள். எப்போதுமே யாருக்காவது உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் வியாபாரிகளாக இருப்பார்கள். பிற்காலத்தில் நரம்புத் தளர்ச்சி, அஜீரணக் கோளாறு கூட ஏற்படலாம். இன்னும் சிலருக்கு சரும வியாதிகளின் தொல்லை அதிகம் இருக்கலாம்.
சுக்கிரன்:-
உடலில் ஏதாவது ஒரு இடத்தில் உருவத்தில் பெரியதாக பழுப்பும், வெளுப்பும் கலந்த நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்று இருப்பார்கள் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்த்திரம். இது மிகவும் அபூர்வமான அமைப்பாகும். இவர்கள் பொதுவாக மாநிறத்துடன் இருப்பார்கள். காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இனிமையாகப் பேசும் தன்மை உடையவர்கள். தலைவர்கள், உலகம் போற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே இது போன்ற மச்சம் காணப்படும். இவர்கள் பெண்களைக் கவரும் குணம் கொண்டவர்கள். அழகும், செல்வமும் ஒரு சேரப் பெற்று இருக்கும் என்பதால் பெண்கள் இவர்களை சுற்றிச் சுற்றி வருவார்கள். எனினும், சிலருக்கு தண்ணீர், நெருப்பு இவைகள் மூலமாக கண்டங்கள் வரும். தலைவலி, நெஞ்சு வலி போன்றவை கூட அடிக்கடி வரலாம்.
சனி :-
உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் உருவத்தில் பெரியதாக கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தைப் பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் இவ்வகை மச்சம் தான் பலருக்கு அதிகம் காணப்படுகிறது. அதிக உழைப்பாளிகளாக இருப்பார்கள். எதையும், எவரையும் எளிதில் மறக்க மாட்டார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள். தனிமையை விரும்புவார்கள். வாழ்க்கையில் பிற்பகுதியில் தான் செல்வ நடமாட்டமே இருக்கும். ஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், ரத்த சம்மந்தமான நோய்கள் கூட சிலருக்கு வரலாம். சிலருக்கு சுவாசம் சம்மந்தமான கோளாறுகள் கூட வரலாம்.