எண்ணங்களை மாற்றுங்கள்… வெற்றி தானாக வரும் ….!
நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் வெற்றி, தோல்விகள், சவால்கள், பிரச்சனைகள், துயரங்கள் என, அனைத்திற்கும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களே அடிப்படையில் காரணங்கள்.
உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை நிகழ்த்த வேண்டுமா?
நீங்க யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம்.
நான் என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும். எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும்.
நம் எல்லாரின் தலை மீதும் தேவதைகள் உலா வந்து சுற்றிக் கொண்டிருக்குமாம். நாம் என்ன நினைக்கிறோமோ அல்லது சொல்கிறோமோ அப்போதெல்லாம் ததாஸ்து என சொல்லுமாம். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என அர்த்தமாம். எனவே நல்லதையே சிந்தி. நல்லதையே சொல் . நல்லதையே செய்..
நம் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது நினைத்ததை செய்ய வழிமுறை பிறக்கும். அதற்கு அனைவரும் துணைபுரிவார்கள். அந்தச் செயல் எளிதாக நிறைவேறும்.
நான் யார் என்ற தேடல், இப்போது என்னால் என்ன செய்ய முடியும், நான் என்னவாக ஆக நினைக்கிறேன் அதற்கு என்னென்ன வழிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.
ஒரு தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கும் மாணவனோ, திடீரென வந்து விட முடியாது.
எதற்கும் திட்டமிடலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் வேண்டும்.
தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்ப்பான்மையோ கூடாது. நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தக்க நபர்களையும், நிகழ்வுகளையும் மனம் கண்டுபிடிக்கும்.
நேர்மறை சிந்தனை எல்லா நல்லவைகளையும் கண்டுபிடிக்கும். இது தெய்வத்திற்கு ஒப்பானது.
எதிர்மறை சிந்தனை அனைத்து அழிவுகளையும் கொண்டுவரும். இது சாத்தானுக்கு ஒப்பானது. அழிவு சக்தியை விடுத்து ஆக்க சக்தியை மட்டும் பயன்படுத்த மனதைப் பண்படுத்துதல் முக்கியம்
ஆரோக்கியமான சிந்தனையும், ஆரோக்கியமான உணவும் மனிதனை நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
இந்த ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் பெற முதலில் நல்ல புத்தகங்கள், பின் நல்ல உணவு. நல்ல பழக்க வழக்கங்கள் பின் யோகா தியானம் போன்றவை உதவுகின்றன.
எண்ணங்களை ஒழுங்கு படுத்துதல் ஓரிடத்தில் குவித்தல், மையத்திலிருந்து விலகாமல் நமக்கு வேண்டியவற்றை நியாயமான முறையில் பெற சிந்தித்தல் போன்றவை நேர்மறை சிந்தனையின் பயிற்சிகளாகும்.
விடாமுயற்சியோடு போராடுபவன் நீரில் விழுந்து நீச்சல் கற்றுக் கொள்வதுபோல கற்பிக்கிறது. ஜெயிப்பது என்பதன் பலபடிகளைக் கடந்து ஜெயித்தபின் அந்த அனுபவமே தெய்வமாகிறது.
நாம் என்ன சாதிக்க வேண்டுமானாலும் சரி, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்புங்கள். செயல்களை செயல்படுத்த நேர்மறை எண்ணங்களின் உதவியை நாடுங்கள். எண்ணம் போல வாழ்வு என்ற சொல்லுக்கு ஏற்ப எவ்வளவு உயரம் எட்ட விரும்புகிறீர்களோ அந்த உயரத்தை உங்களால் சுலபமாக எட்ட முடியும்.
இதுதான் முக்கிய தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.