வாஸ்துவில் கருட மனை, பாம்பு மனை என்பது உண்மையா

வாஸ்துவில் கருட மனை, பாம்பு மனை என்பது உண்மையா?

 

பல நண்பர்களுக்கு கருட மனையில் வீடு கட்டலாமா ? பாம்பு மனை இருந்தால் என்ன செய்வது ? என்ற சந்தேகம் எழுகிறது.

 

பொதுவாக இந்த பூமியில் நாம் பிரிக்கக் கூடிய மனைகள் எல்லாமே ஒரே தன்மை உடையவைகள். இது போன்ற பாம்பு , கருடன் அல்லது வேறு எந்த பெயர்களையும் யாரும் வைப்பதில்லை. இவைகள் அனைத்துமே மூட நம்பிக்கையே.

 

வீட்டின் அளவு

 

நம் வீடு கட்ட வாங்கக் கூடிய மனையின் அளவு குறிப்பிடும் படியான சில அளவுகள் உண்டே தவிர மற்றவைகள் இதில் ஏதும் கிடையாது. அதாவது நீளம் மற்றும் அகலம் எப்போதும் இரு மடங்கிற்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது நீளம் 30 என்றால் 60 வரை வரலாம். நீளம் 40 என்றால் 80 வரை வரலாம். இவையே ஒரு அடிப்படையான அளவுகளாகும். இது தவிர நீளம் 20, அகலம் 60 மற்றும் நீளம் 20, அகலம் 80 போன்ற அளவுகளில் இருப்பது மிக மிக தவறு. அதாவது நீளத்தைக் காட்டிலும் அகலம் 3 மடங்கிற்கு மேல் வருமானால், அந்த இடத்தில் வீடு கட்ட முடியாது. இதுபோல மனைகளை வியாபார ஸ்தானத்திற்கு ஏற்றதாக இருப்பின், அதை வியாபார ஸ்தலமாக மாற்றுவது சிறப்பு.

குறைந்த அளவு எது ?

அடிப்படையில் நாம் வாங்கக்கூடிய இடம் மிக மிக குறைந்த அளவான 21 அடி இருக்க வேண்டும். இது நீளத்திலும் இருக்கலாம். அகலத்திலும் இருக்கலாம். 21 அடிக்கு குறைவான இடங்களில் வாஸ்து படி வீடு கட்ட முடிவதில்லை என்பதே எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை .

 

சென்னை போன்ற பெரு நகரங்களில் 11 அடி, 17 அடி அளவுகளில் பல இடங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற அளவுள்ள இடங்களில் வீடு கட்டி விட்டால் கிழக்கு, வடக்கு பகுதி முழுவதும், மூடிய அமைப்பாக ஏற்பட்டு சூரிய ஒளி என்பது கேள்விக் குறியாக ஆகிவிடுகிறது. எனவே, நண்பர்களே மனையை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக முக்கியம்.