நம்முடைய இடம் யார் பெயரில் இருந்தால் நன்மை

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

நாம் வாங்கிய இடம் அல்லது வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்க வேண்டும். ஆண்கள் பெயரில் வாங்கினால் என்ன நன்மை தீமைகள். பெண்கள் பெயரில் வாங்கினால் என்ன நன்மை தீமைகள் பற்றி அறிவோம்.

 பூமி என்பது பெண் வடிவமென்றும் சூரியன் என்பது ஆண் வடிவமென்றும் இரண்டு பேரும் சேரும் போதுதான் இந்த பூமியில் உயிரினங்கள் பிறந்து வாழ்கிறது என்று பல புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி நாம் வாங்கக்கூடிய இடம் வாஸ்து இடம். வாஸ்து சாஸ்திரத்தில் ஆண்களுக்கு உரிய இடமென்றும் பெண்ணுகளுக்கு உரிய இடமென்றும் உண்டு. அதை தெரிந்து வாங்குவதே மிக மிக புத்திசாலித்தனம்.

வடக்கு கிழக்கு ரோடு :

 வடக்கு கிழக்கு ரோடு அமைப்பு மனைகள் அனைத்துமே ஆண்கள் பெயரில் வாங்குவது மிக நல்ல பலனை தரும். அதுவும் அந்த வீட்டில் முதல் வாரிசு பெண் குழந்தையாக இருந்தால் சகல ஐஸ்வர்யத்தையும் தரவல்லது. இதுபோன்ற ரோடு அமைப்புகள் எக்காரணம் கொண்டு பெண்கள் பெயரில் வாங்குவதை தவிர்த்தல் நல்லது. அதனால் பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

தெற்கு கிழக்கு ரோடு அமைப்பு :

 தெற்கு கிழக்கு ரோடு அமைப்பு உள்ள இடம் எப்பொழுதுமே பெண்கள் பெயரில் வாங்குவதுதான் சிறப்பு. அதுவும் ஒன்று,இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்கள். இதுபோல அமைப்புகளில் வசித்தாலோ அல்லது வாங்கினாலோ மிக மிக சுபிஷ்ச்சமான வாழ்க்கையை வாழ முடியும்.

 இதுபோல அமைப்புகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியராகவே இருக்கிறார்கள். அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள் அதிகம் வசிப்பது இது போல தென் கிழக்கு ரோடு அமைப்பு உள்ளவர்களே. தென் கிழக்கு ரோடு அமைப்பு உள்ள இடத்தை ஆண்கள் பெயரில் வாங்குவது தவறு. அப்படி வாங்கும் பட்சத்தில் அவர்கள் அதிகப்படியான நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்கள் அந்த குடும்பத்தை விட்டு கூட வெளியேறி விடுகிறார்கள். உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே ஆண்கள் தவிர்த்தல் நல்லது.

 

தெற்கு மேற்கு ரோடு :

 தெற்கு மேற்கு ரோடு அமைப்புகள் உள்ள இடம் ஆண்கள் பெயரில் அமைவது மிக மிக சிறப்பு. இதுபோல உள்ள இடங்களில் உள்ள ஆண்கள் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்கள். கோடீஸ்வராகவும் தொழிலதிபராகவும் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். இதுபோன்ற தெற்கு மேற்கு ரோடு உள்ள இடத்தை பெண்கள் பெயரில் வாங்குவது தவறு. அதனுடைய பாதிப்பு பெண்களுக்கே இருக்கும். அதிகப்படியாக குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனை ஏற்படும். விபத்து தற்கொலை கோர்ட்டு கேஸ் விவாகரத்து போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வடக்கு மேற்கு ரோடு அமைப்பு :

 வடக்கு மேற்கு ரோடு அமைப்பு இடத்தை பெண்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. இதுபோல இடத்தில் இருப்பவர்கள் ஆண் பெண் இருவருமே கலைகளை கற்றுணர்ந்தவர்களாக இருப்பார்கள். மிக ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். புத்தியுடையவர்களாக இருப்பார்கள். பிரபலமானவர்களாகவே இருப்பார்கள்.

 வடக்கு மேற்கு உள்ள இடத்தை ஆண்கள் பெயரில் வாங்குவதால் பல பிரச்சனைகள் ஆண்களுக்கே. கடன் சுமை அதிகமாகவும் நிரந்தர தொழில் அமையாது. வீட்டை விட்டு வெளியேற கூடிய சூழ்நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் கூட பிரச்சனையில் முடியும்.