ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன?

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம், வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2018-19ஐ நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாட்டில் சுமார் 50% பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ள இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.11,000 கோடி தொகையை மத்திய மாநில அரசுகள் செலவிட உள்ளன. இதில் 40% தொகையை மாநில அரசுகளும் 60% தொகையை மத்திய அரசு அளிக்கின்றன.
இந்நிலையில், 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஆண்டு பிரீமியம் தொகைக்கு தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.