இன்றைய பரபரப்பான சூழலில், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தும், நின்று கொண்டும் வேலை செய்வது… இரவு தூக்கத்தை இழப்பது… இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இப்படி நம்முடைய இயல்பான வாழ்க்கை முறை முற்றிலுமாக மாற்றிப் போடப்பட்டதன் விளைவு, இளம் வயதினருக்கும் முதுகு வலி அழையா விருந்தாளியாகிவிட்டது… குறிப்பாக – பெண் களுக்கு!
அந்த முதுகுவலி பற்றியும், அதிலிருந்து தப்பிப்பது பற்றியும் இங்கே உங்களுக்காக விரிவாகப் பேசுகிறார் ‘புனர்ஜனீஸ் லைஃப் சயின்சஸ்’ ஆயுர்வேத அமைப்பின் டாக்டரான ஷாஜி ராஜ்.
”மனிதனின் முதுகுத் தண்டு, உச்சந்தலையில் ஆரம்பித்து முதுகின் கீழ்ப்பகுதி வரை பரவி இருக்கிறது. அதற்குள்தான் ‘சுஷ§ம்னா நாடி’ இருக்கிறது. அதில்தான் குண்டலினி சக்தியினுடைய வேர் ஆரம்பமாகிறது. மனித உடம்பின் முக்கிய பகுதியான முதுகுத் தண்டில் பிராண ஓட்டம் சுழன்று கொண்டே இருக்கும். பிராண ஓட்டம் இல்லாமல் போனால், மனிதன் வாழவே முடியாது.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, உட்காரும் நிலைப்பாடு, இரவு தூக்கமின்மை, எரிச்சல், மன அழுத்தம், இடைவிடாது வேலையில் ஈடுபடுவது, அதிக எடை தூக்குவது, ஹை ஹீல்ஸ் காலணி அணிவது போன்ற காரணங்களால்… இடுப்பு, முதுகுவலி நிச்சயம் இருக்கும்.
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ரிலாக்ஸின் (Relaxin) என்கிற ஹார்மோன் சுரக்கும். குழந்தை எளிதில் வெளியேறுவதற்கு இது உதவுகிறது. சிலருக்கு இதுவே பிரச்னையாகி, இடுப்பு மற்றும் முதுகு வலிக்கு வழிவகுத்துவிடும். முதுகுத் தண்டில் ஊசியைச் செலுத்தி, சிசேரியன் மூலம் குழந்தை பெறும் பெரும்பாலான பெண்களுக்கும், நிச்சயம் முதுகுவலி வர வாய்ப்புகள் அதிகம்.
முதுகுத் தண்டுவடத்தில் இருக்கும் லம்பர் வெர்டப்ரே (Lumbar Vertebrae) எனப்படும் முள்ளெலும்புகள், ஒன்றுடன் ஒன்று உராயாமலிருக்க, இடையிடையே குஷன் போன்ற ஜவ்வு இருக்கும். அதிக எடை தூக்குவது, உட்காரும் நிலை சரி யில்லாதது போன்ற செயல்பாடுகளினால் எலும்புகள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, அந்த ஜவ்வானது வெளியில் தள்ளப் படும். அப்போது இரண்டு எலும்புகளும் உராயும். அந்த சமயத்தில் மிக அதிகமாக வலி தோன்றும்’’ என்ற டாக்டர் ஷாஜி, முதுகுவலியை விரட்டும் பாரம்பரிய ஆயுர் வேத சிகிச்சை முறைகளை அடுக்கினார்.
பும்சவனம்: இதை, வரும்முன் காக்கும் சிகிச்சை என்றும் கூறலாம். ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிரசவத்துக்கு பிறகும் ‘பும்சவனம்’ என்கிற இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மருந்துகள் மாறும். ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து, அதன் அடிப்படையில், பிரத்யேகமாக கஷாயம் காய்ச்சி தரப்படும். இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்குநிச்சயம் நார்மல் டெலிவரிதான். இந்த சிகிச்சை மூலம் தாய்க்கு முதுகுவலி வருவது தடுக்கப்படும்.
அப்யங்கம்: பிரசவத்துக்குப்பிறகு முதுகுவலி இருந்தால், அப்யங்கம் சிகிச்சை கொடுக்கப்படும். உடம்பில் மூலிகை எண்ணெய் போட்டு பிராண ஓட்டம் சரி செய்யப்படும். இது, தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்.
தான்யா அம்பதாரா: அப்யங்கத்துக்குப் பிறகு செய்யக்கூடிய சிகிச்சை இது. மூலிகைகளை தண்ணீர் விட்டு காய்ச்சி, வலி இருக்கும் இடத்தில் விடுவோம். இதனால், இறுகிப் போன தசைகள் தளர்ந்து வலியை விரட்டிவிடும்.
சர்வாங்கதாரா: மேற்கண்ட இரண்டு சிகிச்சைக்குப் பிறகும் முதுகுவலி தீராமல் இருந்தால், ‘சர்வாங்கதாரா’ சிகிச்சை செய்யப்படும். கேரளாவில் ஒரு சில குடும் பங்கள் மட்டுமே இந்த சிகிச்சையை செய்கின்றன. பல்வேறு மூலிகைகள் போட்டு காய்ச்சிய எண்ணெயைக் கொண்டு 21 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். இதனால் உடல், மனரீதியாக புத்துணர்ச்சி அடைவதுடன், பத்து வயது குறைந்தது போல் உடம்பில் தெம்பு கூடும். இச்சிகிச்சையின் மூலம் எந்த வலியையும் நிரந்தரமாக தீர்க்கலாம்.
Oursite: Tamizhan.in
Source :முடிவுகட்டுவோம்… முதுகுவலிக்கு