நம் தவறுகளுக்கு என்ன காரணம்?

னிநபர்களாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தவறு செய்யவே கூடாது என எவ்வளவோ கண்காணிப்பாகச் செயல்பட்டாலும், தவறு நடக்கத்தான் செய் கின்றன. எதனால் இப்படி நிகழ்கிறது என்பதற் கான பதிலைச் சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் ஜெஃப்ரி பெஃப்பர் எழுதிய ‘வாட் வேர் தே திங்கிங்?’ என்கிற புத்தகம். இந்தப் புத்தகம், மேலாண்மை குறித்த வழக்கத்திற்கு மாறான புரிந்துகொள்ளலைத் தருவதற்காக எழுதப்பட்டது.

வியாபார நிறுவனங்களோ, தர்ம ஸ்தாபனங் களோ, அரசாங்கமோ தலைமைப்பதவி வகிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. எக்கச்சக்கமான பணத்தை முழுங்கிவிடக்கூடிய பல முக்கிய முடிவுகளை எடுக்கும் மேல்மட்ட தலைவர்கள் எந்தவிதமான ஆள்களைப் பணிக்கு எடுப்பது, அவர்களிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை எப்படிப் பெறுவது, நிறுவனத்தின் போட்டியாளர்களுடன் எப்படிப் போட்டி போடுவது, எப்படித் தலைமை தாங்குவது, நிறுவனத்தினைப் பாதிக்கக்கூடிய வெளிநிறுவனங்களுடன் இணைந்து எப்படி செயல்படுவது, தங்களுடைய (தலைவர்கள் அவர வர்களுடைய) கேரியரை எப்படி நிர்வகித்துக் கொள்வது என்பது போன்ற பல விஷயங்களில் எது சரியாக வேலை செய்யும் என்று கண்டறிவதே தலைவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.

இன்றைக்கு மேலாளர்களாக இருப்பவர்களுக்கு எது சரியான பாதை என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்கியிருக்கிறதே தவிர, அது குறித்து விரிவாக ஆராய்ந்து படித்துத் தெரிந்து கொள்வதற்கான நேரமே இருப்பதில்லை. அவர் களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் மட்டுமே தேவைப்படுகிறது.

 

என்னதான் உழைப்பையும், நேரத்தையும் கொட்டி இறைத்தாலும் சில முடிவுகள் தோல்வியைச் சந்திப்பதைத் தவிர்க்க முடிவ தில்லை. இது எதனால் என்று தீர ஆராய்ந்தால், நிறுவனத்தின் தலைவர்கள் என்ன நினைத்து ஒரு விஷயத்தைச் செய்கின்றனர் என்ற கேள்விக்கும் அந்தச் செயலின் வெற்றி/தோல்விக்கும் இடையே பெரியதொரு தொடர்பு இருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஒரு பிரச்னையைச் சரிசெய்தபின்னும் எதனால் அந்தப் பிரச்னை வருகிறது என்று மூலாதாரத்தைச் சரிசெய்து விட்டால் பிரச்னை வராது. இதே நோக்கத்தில் ஆராய்ந்தபோது கிடைத்த விடைகளைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது.

நிறுவனங்கள் தவறான முடிவை எடுக்கின்றன என்பதற்கு மூன்று பெரும் பிரிவில் விடைகள் இருக்கிறது. முதலாவதாக, ஒரு முடிவை எடுக்கும்போது அதில் திட்டமிடப்படாத விளைவுகள் (unintended consequences) என்னென்ன உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை முழுவதுமாக மறந்துவிடுவது. இரண்டாவதாக, எந்த ஒரு பிரச்னை என்றாலும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமான தீர்வுக்கான வழிமுறை களைச் சொல்வது மற்றும் செயல் படுத்துவது. மூன்றாவதாக, பல சமயம் சுலபமான விடைகள் இருக்கும் விஷயங்களில்கூட சிக்கலான பாதையையும் நடைமுறையையும் நடப்பில் வைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியும் விஷயத்தைகூடக் காண மறுப்பது. இந்த மூன்று நிலைகளி னாலும்தான் கையிலிருக்கும் பிரச்னையை நன்றாகப் புரிந்து கொண்டு சரியான முடிவெடுக்க வேண்டிய தருணங்களில்கூடத் தவறான முடிவுகளை நிறுவனங்கள் எடுக்கின்றன.

முதல் பிரிவைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்விளைவு இருக்கவே செய்யும். ஒரு முடிவு எடுத்தால், அதனுடைய தாக்கங்களை நிச்சயமாகச் சந்திக்க வேண்டியிருக்கும். நிறுவனங்கள் மனிதர்களின்மீது தாக்கங்கள் உண்டாகும் செயல்களைச்  செய்தால், மனிதர்கள் நிறுவனங்கள் மீது தாக்கங்களை உண்டாகும் விஷயங்களைச் செய்யவே செய்வார்கள்.

உதாரணத்திற்கு, கஷ்ட காலத்தில் நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்கிறேன் என்ற முயற்சியில் இறங்க ஆரம்பிக்கும். நிச்சயமாக சம்பளக் குறைப்பு என்பது நிதி நிலையைச் சரிசெய்ய உதவும்.  அதேசமயம், சம்பளம் குறைக்கப் பட்ட பணியாளர்களின் அர்ப்பணிப்பு, சம்பளத்தை குறைத்தபின் எந்த அளவுக்கு நிறைவானதாக இருக்கும்? இதைப் போல்தான் எல்லா விஷயங்களிலும் என்கிறார் ஆசிரியர்.

இரண்டாவது பிரிவின் தன்மையைக் கொஞ்சம் அலசுவோம். மனிதர்களை வேலை வாங்க ஊக்கத்தொகையைக் கொடுங்கள். அப்படியும் வேலை பார்க்கவில்லையா, தண்டனையைக் கொடுங்கள் என்று சொல்வது மனிதர்களின் நடவடிக்கைகள் குறித்த மிக மிக எளிமையானதொரு கருத்தின் மீதான நடவடிக்கை ஆகும். ஊக்கமும், தண்டனையும் மனிதர்களைப் பொம்மைகளைப் போல் செயல்பட வைக்காது. பணியாளர்களுக்குத் கொடுக்கப் படும் தண்டனைகள் கலகத்தை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

இதுபோன்ற எளிமையான கோட்பாடுகளின் பேரில் நடவடிக்கைகளை எடுக்கும் நிறுவனங்கள் எடுக்கும் முடிவில் தோல்வியடைய வாய்ப்புகள் அதிகமே. இதைத் தவிர்க்க நிறுவனங்கள் அவர்களிடம் இருக்கும் (மேலே சொல்ல ஊக்கத் தொகை/தண்டனை உதாரணத்தில்) பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் ஆராய்ந்தறியவேண்டும். ஏற்கெனவே இதேபோன்ற மாறுதல்கள் செய்யப்பட்டபோது அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருந்தது, வரலாறு என்ன சொல்கிறது, ஊக்கத்தொகை அல்லது தண்டனை என்பதைவிட மாற்று ஏற்பாடுகள் ஏதும் நம்முடைய நிறுவனத்திற்குச் சரிப்பட்டு வருமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். அப்படி ஆராய்ந் தறிந்து எடுக்கப்படும் முடிவே தவறான பாதையில் நிறுவனம் செல்வதைத் தவிர்க்க உதவும்.

மூன்றாவது பிரிவான பல சமயங்களில் கண்ணுக்குத் தெரியும் விடைகளை நாம் கவனிப்பதே இல்லை. பலசமயம் கண்ணுக்குத் தெரியும் விடைகளை விட்டுவிட்டு மிகவும் கடினமான பாதையில் சென்று விடையைத் தெரிந்துகொள்ளவே நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. நல்லது செய்தால், நல்லது திரும்பவரும் என்று நாம் சொல்கிறோம். பணியாளர்களுக்கு நல்லது செய்தால் அவர்கள் விசுவாசத்தினைக் காட்டுவார்கள் என்போம். பணியாளர்களுக்குக் கெடுதியைச் செய்தால் (மெமோ, சம்பளப்பிடித்தம், சம்பளக்குறைப்பு, ஆட்குறைப்பு போன்றவை) என்னவாகும்? அதுவும் திரும்பிவரத்தானே செய்யும். இது கண்ணுக்குத் தெரியும். ஒரு சாதாரண விஷயம் தானே! இதை ஏன் நிர்வாகங்கள் மறந்து போகின்றன’’ என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் தாராளம் இருந்தால் விசுவாசத்திலும் தாராளத்தை யும், கஞ்சத்தனம் இருந்தால் விசுவாசத்தில் அது கஞ்சத்தனத்தையும் திரும்பக்கொண்டுவந்து சேர்க்கும் என ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் சொல்வது, இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில்கொண்டே நிறுவனங்கள் செயல்படவேண்டும் என்பதைத் தான். என்னதான் சி.ஆர்.எம் (வாடிக்கையாளார் சேவைக்கான மேலாண்மைக்கான மென்பொருள்) சாஃப்ட்வேர் போட்டு வேலையைப் பார்த்தாலும் வாடிக்கையாளருக்குச் சேவையைத் தருவது பணியாளர்களே தவிர, சாஃப்ட்வேர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாடிக்கை யாளருக்கு உயரிய அனுபவத்தை தரவிளையும் நிறுவனங்கள் சாஃப்ட்வேரைத் தயார் செய்யும்முன் பணியாளர்களை அதற்காக தயார் செய்ய வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

‘‘எங்களுடைய புத்திசாலித்தனம் (ஸ்மார்ட் னெஸ்) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று பல நிறுவனங்களும் மார்தட்டிக் கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் பேச்சு பேச்சாகவே இருக்கும். உளமார்ந்த எண்ணமாக இருக்காது.

தினம்தினம் ஸ்மார்ட்னெஸ் அதிகரிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது, அந்தப் பிரச்னைகள் அடியோடு வராமல் இருக்கத் தேவையான பணத்தையும், ஆள்பலத்தையும்  உருவாக்குவது, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தால் உடனுக்குடன் அதனைப் புரிந்துகொள்ளும்படியான ஒரு கலாசாரத்தை உருவாக்குவது என்ற மூன்று முயற்சிகளையும் செய்தாலேயொழிய ஸ்மார்ட்னெஸ் என்பது வளர வாய்ப்பேயில்லை. தங்களுடைய ஸ்மார்ட்னெஸ் குறித்துப் பெருமை பேசும் நிறுவனங்கள் பலவும் இந்த மூன்று விஷயங்களிலும் முழுவதாகக் கோட்டை விட்டுவிடுகின்றன என்பதை மறுக்க முடியாது’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி வந்தால் தொழிலாளர் பாக்கெட்டில் கைவைப்பது என்பது ஒரு சுலபமான வழியாக நிறுவனங்கள் நினைக் கின்றன. இது பிரச்னையைப் பெரிதாக்கி மேலும் நிதி நெருக்கடியைக் கொண்டுவர உதவுமே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்யாது.

மோசமான நிதிநிலைக்குப் பணியாளர்களின் சம்பளத்தைக் காரணமாகச் சொல்லாமல் பொருள்கள் மற்றும் சேவையின் தரத்தில் ஏதும் குறை இருக்கிறதா என்று பார்ப்பதே சாலச்சிறந்த விஷயமாகும்.

பிசினஸில் பொய்யான சாதனைகளைச் சொல்லி, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு  செய்யும் தொழிலில் தோல்வியடைந்து விடாதீர்கள்’’ என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

நிறுவன நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய தவறுகள் குறித்து விரிவாகப் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கும் இந்தப் புத்தகத்தை நிர்வாகிகளும் தொழில்முனைவரும் அவசியம் படிக்கலாம்.

– நாணயம் விகடன் டீம்