வீட்டின் மூத்த வாரிசுக்கு திருமணத்தடை ஏற்பட வீட்டின் அமைப்பு தான் காரணமா?
கேள்வி : ஐயா, வணக்கம். எனக்கு மூன்று மகன். அதில் இரண்டாம் நபருக்கும், மூன்றாம் நபருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், முதலாம் நபருக்கு திருமணம் ஆகவில்லை. காரணம் தெரியவில்லை. நான் குடியிருக்கும் வீடு சொந்த வீடு.
பதில் : ஐயா வணக்கம். நீங்கள் காலம் கடந்து என்னிடம் கேள்வி கேட்டு உள்ளீர்கள். இருந்தபோதிலும் நான் இங்கு குறிப்பிடும்படியான அமைப்பு உங்களுடைய வீடு இருக்கும்போது, உங்களுடைய முதல் வாரிசுக்கு திருமணத்தடை ஏற்பட வாய்ப்புண்டு.
நான் குறிப்பிடும் இந்த அமைப்புகளை நீங்கள் சரி செய்யும் பட்சத்தில் அவருக்கு திருமணம் என்பது உறுதியாக நடக்கும்.
1. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முழுவதும் மூடிய அமைப்பு.
2. தெற்கு அல்லது மேற்கு திசையை பார்த்த வீடாக இருக்கலாம். கிழக்கு மற்றும் வடக்கு திசையில் இடைவெளி குறைவாகவும், தெற்கு மற்றும் மேற்கு திசையில் அதிக காலியிடமாக இருக்கலாம்.
3. வடகிழக்கில் பூஜையறை அல்லது சமையலறை இருக்கலாம்.
4. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாமல் இருக்கலாம்.
5. தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் இல்லாமல், அதை வேறு தேவைக்காக பயன்படுத்துவது.
6. வாசல்கள் நீச்சப்பகுதியில் இருப்பது.
7. மாடிபடி அமைப்புகள் தவறாக இருப்பது – தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய வெளிப்பகுதிகளில் திறந்த வெளி அமைப்பாக இல்லாமல் மூடிய அமைப்பாக இருப்பது. வீட்டினுள் தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதி இல்லாமல் வேறு வேறு இடங்களில் வருவது.
8. தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் மிகப்பெரிய போர்டிக்கோ போடப்பட்டு வாசல் அமைப்பை நீச்சப்பகுதியில் வைத்திருப்பது.
9. தென்கிழக்கில் அல்லது வடமேற்கில் போர், கிணறு, சம்ப் போன்ற அமைப்புகள் வருவது.
10. தெருகுத்து, தெருபார்வைகள் நீச்சப்பகுதியில் தவறாக வருவது.
11. வீட்டின் மொத்த அமைப்பில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உயரமான தண்ணீர் தொட்டி அமைப்புகள், படிக்கட்டுக்கான ரூம் அமைப்புகள் வருவது.
ஐயா, நான் மேற்கூறிய இந்த காரணங்களில் இரண்டுக்கு மேற்பட்ட அமைப்புகள் உங்களது வீட்டமைப்பு பகுதியில் வருமானால், கண்டிப்பாக உங்களுடைய மூத்த வாரிசுக்கு திருமணத்தடை ஏற்படும்.