வீடு கட்டுவதற்கு எந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

                                           வீடு கட்டுவதற்கு எந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?
 

வாஸ்து எங்கிருந்து தொடங்க வேண்டும்?

கேள்வி : ஐயா, வணக்கம். வரும் ஆடி மாதம் 11ம் தேதி வாஸ்து நாள் வருகிறது. அந்த நாளில் பூமி பூஜை போடலாமா? எங்க ஊரின் வழக்கப்படி ஆடி மாதம் கூடாது என்கிறார்கள்? ஒரு புது வீடு கட்ட எந்த வழிமுறைகளை நாங்கள் கடைபிடிக்க வேண்டும். தங்களின் அறிவுரை தேவை.

பதில் : தங்களின் கேள்விக்கு மிக்க நன்றி. தமிழ்நாட்டில் பெரும்பகுதியில் ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை. இருந்தபோதும் உங்கள் ஊரின் வழக்கம், உங்களுடைய சமுதாயத்தின் வழக்கத்தை கொண்டு நீங்கள் தான் பூமி பூஜை போடுவதை தீர்மானிக்க வேண்டும்.

வாஸ்து தொடக்கம் :

புது வீடு கட்ட வேண்டும் என்று தீர்மானித்த பிறகு சரியான வாஸ்து நிபுணரை அழைத்து நீங்கள் வீடுகட்ட தேர்ந்தெடுத்த காலி இடத்தை காண்பித்து, அந்த இடத்தில் வீடு கட்டலாமா? எது போல வீடு கட்டலாம்? எந்த திசையில் வீடு கட்டலாம்? எந்த இடத்தில் போர் போடலாம்? எந்த இடத்தில் கழிவுநீர் குழி அமைக்கலாம்? வீடு கட்டுவதற்கு அந்த பூமியின் இயற்கையின் அமைப்பு நமக்கு சாதகமாக உள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

காரணம் : நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தான் 50 சதவீதம் வாஸ்து உள்ளது.

இந்த உலகில் கடவுள், உங்களைப் போல் இன்னொருவரை படைக்கவில்லை. அதேபோல் உங்களுடைய வீட்டைப்போல் இன்னொரு வீடு இல்லை. உடலும், உயிரும் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வாறு தனித்தனியோ அதேபோல் தான் உங்களுடைய வீட்டின் அமைப்பும்.

வாஸ்து நிபுணர், உங்களுடைய இடத்தை, வீடு கட்ட தகுதியான இடம் என்று தீர்மானித்த பிறகு, உங்களுடைய வரைபடத்தை காண்பித்து அதில் வாஸ்து மாற்றங்களை செய்து கொடுக்க சொல்ல வேண்டும்.

பின்பு வாஸ்து மாற்றங்களை செய்த வரைபடத்தை என்ஜினியரிடம் கொடுத்து புளுபிரிண்ட், அப்ரூடு போன்ற விபரங்களை கடைபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு வாஸ்து பூஜை, பூமி பூஜை போன்ற பூஜைகளுக்கு உகந்த நாட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு சிறந்த வாஸ்து நிபுணர் என்றால் பின்வரும் நிகழ்ச்சிகளை அவரே முன்கூட்டியே உங்களுக்கு குறித்து கொடுத்து விடுவார்.

1. பூமி பூஜை போட சிறந்த நாள் எது?

2. தலைவாசல் / நிலை கதவு /கடுகால் வைக்க சிறந்த நாள் எது?

3. கான்கிரீட் போட சிறந்த நாள் எது?

4. கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாள் எது?

5. பால் காய்ச்ச சிறந்த நாள் எது?

6. வீடு குடிப்புக சிறந்த நாள் எது?

போன்ற விபரங்களையும், மேலும் ஒரு கட்டிடத்தை கட்ட தொடங்கும் போது எந்த பகுதியை முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும். எந்த பகுதியை கடைசியில் ஆரம்பிக்க வேண்டும் போன்ற விபரங்களை ஒரு அனுபவபட்ட வாஸ்து நிபுணர் முன்கூட்டியே உங்களுக்கு தெரியப்படுத்திவிடுவார். இந்த வழிமுறைகளே வாஸ்து தொடக்கம் என்போம்.