வாஸ்து சாஸ்திரத்தில் விருந்தினர் அறையின் முக்கியத்துவம் !

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

வாஸ்து சாஸ்திரத்தில் விருந்தினர் அறையின் முக்கியத்துவம் !

சமுதாயத்தில் நமது முன்னோர்கள் பலகாலங்களாக கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். ஆனால் இன்றோ வேறு நிலைமை திருமணமான சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் சென்றே ஆக வேண்டும் என்கிற குடும்பத்தையெல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் சமுதாயத்தில் நம்முடைய வீட்டிற்கு வரக்கூடிய விருந்தினரை தனியாக தங்க வைப்பதற்கென்றே தனது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒரு அறையை கட்டி வைத்துள்ளார்கள். இந்த விருந்தினர் அறையை எங்கு வைப்பது? எப்படி அமைப்பது? அதனால் நமக்கு ஏதேனும் நன்மை தீமைகள் உண்டா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

இன்று நமது ஊரில் 5 முதல் 10 சதவிகிதம் வீடுகளில் விருந்தினர் அறை ஒதுக்கி கட்டக்கூடிய வீடுகளை பார்த்திருப்பீர்கள். வடகிழக்கு பகுதியிலும் தென்கிழக்கு பகுதியிலும் விருந்தினர் அறையை வைத்து கொள்ளலாம். அல்லது வைக்காமலும் விட்டுவிடலாம். அதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் நமக்கு ஏற்படாது.

வடமேற்கு பகுதியில் மட்டுமே விருந்தினர் அறை வருவது சிறப்பு. இந்த வடமேற்கு பகுதியில் உறவினர்களை தங்க வைக்கும்போது ஒரு நாள் இரண்டு நாள் அதற்கு மேல் அவர்களால் அங்கு தங்க முடியாத நிலை உருவாகி தனது வேலையை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.

நமது வீட்டில் எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் விருந்தினர் அறையை அமைக்கக்கூடாது. தவறுதலாக அந்த பகுதியில் விருந்தினர் அறை இருந்தாலும் விருந்தினரை அங்கு தங்க வைக்கக்கூடாது. ஏன் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது என்பதற்கு ஒரு காரணம் ஒன்றைப் பார்ப்போம். 

ஒரு வீட்டிற்கு ஒருநாள் இரவு பொழுதை கழிப்பதற்காக தங்கி அந்த வீட்டின் மொத்த உரிமையையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய சொல் பேச்சைக் கேட்கும் அளவிற்கு அந்த குடும்பத்தை தன் பக்கம் மாற்றிவிடும் ஆட்கள் நிறைய பேரை நமது சமுதாயத்தில் நாம் காண முடியும். 

எனவே உங்களது வீட்டில் தென்மேற்கு பகுதி உங்களுடைய இடம் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். வடமேற்கு பகுதி (வாயு மூலை) வந்து செல்பவர்களுக்காகத்தான். அதை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள்.