வாஸ்து ஓர் அறிமுகம்

வாஸ்து ஓர் அறிமுகம்:-

      சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாபழக்கம் என்போம், அதுபோல தான் வாஸ்து கலையும். பழக பழக கைகூடி வரக்கூடியது. மிகவும் எளிமையானது. எல்லோரும் கற்றுக் கொள்ள ஏதுவானது. பொதுவானது. வாஸ்து கலையை அறிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்போம். அதாவது மற்றவர்களுக்கு கிடைக்காத ஒரு அரிதான விஷயம் கடவுளால் இயற்கையாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது அர்த்தம்.

      வாஸ்து கலையை கற்றுக் கொள்ள வெளியில் எங்கும் தேட தேவையில்லை, காரணம் நீங்கள் உங்களுடைய வீட்டிலிருந்தே வாஸ்து கலை கற்றுக் கொள்ள தொடங்கலாம். அதாவது உங்களுடைய வீட்டில் தாத்தா அல்லது அப்பா, சித்தப்பா இவர்களில் யாரேனும் ஊருக்கு தலைவராகவோ அல்லது பெரிய பதவிகளில் இருந்திருந்தார்கள் என்றால் உங்களுடைய வீட்டை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியை கவனமாக பாருங்கள். மற்ற வீடுகள் போல் இல்லாமல் உங்களுடைய வீடு அமைப்பு வித்தியாசப்படும்.

      உங்களுடைய அப்பா அல்லது சித்தப்பா அல்லது அத்தை இவர்கள் யாரேனும் பாட்டி வீட்டில் வளர்ந்தார்கள் என்கின்ற விபரம் உங்களுக்கு தெரிந்தால் உங்களுடைய வீட்டை வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியை கவனித்து பாருங்கள். மற்ற வீடுகள் இல்லாமல் உங்களுடைய வீடு வித்தியாசப்படும்.

      உங்களுடைய குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை வியாதி அல்லது கேன்சர் போன்ற வியாதிகள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்தால் உங்களுடைய வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் பள்ளம் போன்ற அமைப்பு அல்லது செப்டிக் டேங்க், கோபுரா கேஸ் போன்ற அமைப்புகள் இருப்பதை நீங்கள் காணலாம். அதாவது பூர்வீக வீடு முதல் இன்று உள்ள வீடுகள் வரை அதே பாதிப்புகள் தொடரும் என்பதே இதன் அர்த்தம்.

      நாம் ஒரு விருந்துக்கு செல்லும் இடத்தில் இலை போட்டு பரிமாறும் போது அதில் கூட்டு, பொரியல், வடை, அப்பளம், உப்பு, ஊறுகாய், இது போல இன்னும் எவ்வளவு அயிட்டங்கள் பரிமாறினாலும் முக்கியமான சாதம் இல்லையென்றால் இந்த கூட்டு பொரியல் பயன்படாது. அதே போல்தான் வாஸ்துகலையும். மற்ற எல்லா கலையும் மனிதனுக்குரிய பலாபலன்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவுமே தவிர, பிரச்சினைகள் வராமலோ அல்லது மாற்றி அமைக்க முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் வாஸ்துவால் மட்டுமே இந்த இடத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்த முடியும் என்பதை என்னால் என்னுடைய அனுபவ ரீதியாக உணர முடிந்தது.

      கற்றவர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்று வள்ளுவ பெருந்தகை கூறியது போல, வாஸ்து கலை கற்றுணர்ந்தவர்கள் எங்கு சென்று இடம் வாங்கினாலும் நல்ல இடங்களை மட்டுமே அவர்கள் வாங்கி தான் மட்டுமல்லாது தன்னுடைய சந்ததிகள் மேலும் சந்தோஷமான வாழ்வை அனுபவிக்கும்படியாக அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

       வாஸ்து என்பது வஸ்து என்கிற வார்த்தையிலிருந்து வந்ததாக பல புத்தகங்களில் படித்துள்ளேன். அதாவது வஸ்து என்பதன் அர்த்தம் ஒரு மறைபொருள் என்று அர்த்தமாகிறது. அதாவது வஸ்துவானது நம்மிடத்தில் ஒரு மறைபொருளாக இருந்து நமக்கு நன்மையை அல்லது தீமையை அளித்து வருகிறது என்பதை வாஸ்து சாஸ்திரம் என்கிறோம்.