வாஸ்துவும், வஸ்திர தானத்தின் நன்மையும்
பிரதான தொழில்
தானம் செய்வதற்கும், நம் வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் இயல்பாகவே தானமளிக்கும் இயல்பு கொண்டவர்களாக வாழ்ந்து வந்தனர். முந்தய காலத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. அப்பொழுது பெரிய விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாகவே பொருட்களை வழங்கி வந்தனர். அதுமட்டுமல்லாமல் பொங்கல் திருநாள் போன்ற சிறப்பு தினங்களில் ஏழை எளியவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுப்பார்கள்.
இன்றையக் காலகட்டத்தில் நாம் வேலை செய்யும் இடத்தில் நம் அருகில் இருப்பவர்கள் உதவி கேட்டால் கூட உதவ நாம் தயாராய் இல்லை என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை .
தானங்களில் பல விதங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் வஸ்திர தானம் பற்றித் தெரிந்து கொள்வோம்.
வஸ்திர தானம்
வஸ்திரதானம் என்பது புது வீடு கட்டும்போது, வேலை செய்தவர்களுக்கும், கோயில் கும்பாபிஷேகம் செய்யும் போதும் கொடுப்பதைப் பற்றி மட்டும்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வஸ்திர தானம் பற்றிய ஓர் உன்னதமான உண்மை என்னவென்றால் வஸ்திர தானம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து சுபிக்க்ஷமும் கிடைக்கும்.
நம் முன்னோர்கள் இதன் நன்மைகள் பற்றி அறியாமலேயே வஸ்திர தானம் செய்து சுபிக்ஷத்தை அனுபவித்து வந்துள்ளனர். தானம் செய்வதும் பிரபஞ்ச ரகசியங்களில் ஓன்று . வஸ்திர தானம் என்பது நாம் தினமும் செய்ய முடியாது.
தானமும், தவமும்
ஆனாலும் வஸ்திர தானத்தை மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்தாலே போதுமானது. அதுவும் குறிப்பாக நம் பிறந்தநாள், திருமண நாள் அல்லது வேறு ஏதேனும் வாழ்க்கையின் முக்கிய நாட்களில் வழங்கினால் மிகச்சிறப்பாக இருக்கும்.
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்கா தெனின். – திருவள்ளுவர்
இதன் விளக்கம், இந்த பெரிய உலகத்தில் மழை பெய்யவில்லையானால் இங்கு தானமும் தவமும் இல்லையென்று பொருளாகும். எனவே தானம் செய்வோம், மழை பெறுவோம்…