வாஸ்துவில் பரிகாரம் தீர்வாகுமா
கேள்வி
ஐயா வணக்கம் நாங்க வீடு கட்டி இரண்டு வருடம் ஆகிறது.எங்கள் வீட்டில் கிழக்கு பகுதியில் குறைவான இடைவெளியில் வடக்கு பகுதியில் இடமே இல்லாமலும் வீடு கட்டி விட்டோம்.
தென்மேற்கு வாசல் வைத்து வீடு கட்டி விட்டோம்.இதை மாற்றி அமைக்க முடியாது என்பதற்காக பரிகாரம் செய்தோம் அதில் வடக்கு கிழக்கு காம்பவுண்டுக்கு பதிலாக செம்பு கம்பியை பதித்து கொடுத்தார்கள்.அது காம்பவுண்டுக்கு உண்டான வேலையை செய்யும் என்று பதித்து கொடுத்தார்கள் தெற்குவாசல் தவறு என்பதற்கு சில பொருள்களை பதித்து வைத்தோம் இருந்தபோதும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது,எனக்கு தக்க ஆலோசனை கூறுங்கள் ஐயா.
பதில்
நாம் வாழக்கூடிய இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த விஷயங்களை கூறும் பொழுது மட்டுமே மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எது கூறினாலும் அதை மக்கள் உதாசினப்படுத்தி விடுகிறார்கள்.
அதேபோல் தான் நான் கூறும் வாஸ்துவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த விஷயங்களை ஆகும்.மூடநம்பிக்கைகளை நாம் எப்பொழுதும் ஊக்குவிப்பது கிடையாது.
ஒரு கட்டிடத்தை எப்படி உருவாக்கினார்களோ அதற்கேற்ற பலனையும், தாக்கத்தையும் அந்த வீட்டில் உள்ளவர் மீது அந்த வீடு சதாசர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு உங்கள் உடலில் அறுவை சிகிச்சை செய்யும் படியான ஒரு நோய் ஏற்பட்டிருந்தால் அதற்கு எவ்வளவு காலம் நீங்கள் அறுவை சிகிச்சையை தவிர்ப்பதற்கு மாத்திரை எடுத்துக்கொள்ள முடியும்.
நிரந்தர தீர்வு என்பது அறுவை சிகிச்சைதான் என்றால் அதை செய்தால் மட்டுமே அதிலிருந்து பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
அதே போல் தான் ஒரு வீட்டின் தவறு என்றால் அதை எடுத்து உடைத்து மாற்றி அமைத்து புதுப்பித்து கட்டிக் கொள்ள வேண்டுமே தவிர பரிகாரம் என்கிற பெயரில் பொருட்களை வைத்துக் கொள்வதும், வர்ணங்களை மாற்றியமைப்பதும், மரங்களை வளர்ப்பதும், மீன் வளர்ப்பதும், செடிகளை வளர்ப்பதும், விலங்குகளை வளர்ப்பதும், செம்பு கம்பி பதிப்பதும், பிரமிடு பதிப்பதும் ,சீனா பொம்மை வைப்பதும் இது போல விஷயங்கள் நிரந்தர தீர்வு ஆகாது.
ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வீடு கட்டும் பொழுது சரியாக அமைத்துக் கொண்டால் ஒரு செலவுடன் முடிந்துவிடும்.
தவறாக கட்டி விட்டு அதை இடித்து உடைத்து புதுப்பிக்கும் பொழுது மூன்று வித செலவுகள் செய்ய வேண்டி வரும்.