மேஷ இலக்ன பொதுபலன்கள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமுள்ளவர்கள். அதிக பருமன் இல்லாத, நல்ல உடல் கட்டுடையவர்கள். நீண்ட கழுத்துடையவர்கள்,
சிவந்த விழிகளைக் கொண்டவர்கள். இவர்களுடைய தலை அல்லது முகத்தில் காயம்பட்ட தழும்பு அல்லது மச்சம் போன்ற அடையாளம் இருக்கும்.
உஷ்ண தேகம் கொண்டவராகவும், போர்க்குணம் படைத்தவராகவும் இருப்பார்கள்.
எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவைப் பார்த்துவிட வேண்டுமென்ற உறுதி கொண்டவர்கள்.
எதிலும் விரைவாக ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். தன்னைக் கண்டு பயப்படக்கூடிய எதிரிகளை அதிகம் கொண்டவர்கள்.தனக்கு ஒருவர் நன்மை செய்கிறார் என்றால் அவருக்காக எந்த நல்லதும் செய்ய தயங்கமாட்டார்கள். பிரச்சனைகளை உருவாக்குவதிலும், பிரச்சனைகளில் சிக்குவதிலும் விருப்பம் உடையவர்கள். தீர்க்கமாக யோசித்து ஒரு காரியத்தில் ஈடுபட்ட போதும், செய்வோமா? வேண்டாமா? என்ற குழப்பத்தோடு இருப்பவர்கள். கடின உழைப்பாளியாக இருந்த போதிலும் இவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் இராது. பெரிதாக ஆடம்பரமான சிந்தனை இவர்களுக்கு இல்லை.
தனது வாழ்க்கையை எப்போதும் எளிமையாகத் திட்டமிடக்கூடியவராக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்கள். சுருக்கமாகப் பேசி எளிதில் புரியவைக்கக்கூடியவர்கள். மனோதிடம் அதிகம். எந்தவொரு விசயத்தையும், படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்வது இவர்களுக்கு பிடிக்காது. எதையும் அனுபவித்து தெரிந்து கொள்வதையே அதிகம் விரும்புவார்கள். சுய நலத்தோடு கூடியவர்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்று மனதளவில் மட்டும் எண்ணுவார்கள். விட்டுக்கொடுக்கும் குணம்
என்னவென்றே இந்த இலக்ன காரருக்குத் தெரியாது. தனக்கு வேண்டியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கூட சுயநலப்போக்கோடு செயல்படுவார்கள்.
இவரை யாரும் புகழ் வேண்டிய நேரத்தில் கூட புகழமாட்டார்கள். வாழ்க்கையில் எப்படி போராடி வெற்றிகளைப் பெற வேண்டும் என்று இந்த இலக்னகாரரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.