மன அழுத்தத்தை சரி செய்யும் சீதாப்பழம்
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.
சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது. எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!
நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது. கஸ்டர்ட் என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.
சீதாப்பழத்தை பலர் சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக உள்ள விதைகளின் காரணமாகத்தான். இந்த விதைகளை விதைத்து மட்டுமல்லாமல், பதியன் வைத்தும் சீதாப்பழ மரங்களை வளர்க்கலாம். முதன் முதலில் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் சீதாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. இதன் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் இப்பழ மரம் வளர்க்கப்படுகிறது. இதன் மணமும் சுவையும் எல்லோருக்கும் பிடித்திருப்பதால், இதனை ஜாம், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம், பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.