பஞ்ச அங்கங்கள் தரும் நன்மைகள்:
சுப நாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். விரோதிகள் வலு விழப்பார்கள் துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் ஸித்திக்கும் கோ தானத்தினால் உண்டாகும். பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.
தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும் வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) அதன் பின்னர் ஸ்நானம் செய்துவிட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.
பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.
திதி- சந்திரனின் நாளாகும் மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும்.
(கிருஷ்ண பட்சம்)
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி
துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம் ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.
திருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி. இது அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).
சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி. இது எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.
பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம் விசேஷமான திதி ஆகும். இது குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும் நாக பஞ்சமி விசேஷமானது.
சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.
சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது வாகனம் வாங்கலாம் வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.
அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.
நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.
தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப் பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எம தருமனே அதி தேவதை.
ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.
துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.
பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.
அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம்.
தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இயந்திரப் பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.
திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.