திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி  கிரிவலம்…!

 

திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை வழிபட முடியாவிட்டாலும், நினைத்தாலே அருள் தரும் புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் கோவில்.

 

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

 

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

 

திருவண்ணாமலை கிரிவலம் :

 

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசான்யலிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும். ஏனென்றால், மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது நமசிவாய, சிவாயநம அல்லது தேவாரம், திருவாசகம் உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது.

கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும். அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்து கொண்டோ செல்லக்கூடாது.

பலன்கள் :

அருணாச்சலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும்.

வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும்.

மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப்பெறும்.

 

எந்தக் கிழமையில் வலம் வந்தால் என்ன பலன்?

ஞாயிற்று கிழமை – சிவலோக பதவி கிட்டும் .

திங்கட்கிழமை  – இந்திர பதவி கிடைக்கும் 

செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .

புதன் கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.

சனிக்கிழமை – பிறவிப்பிணி அகலும்.

அஷ்டமி – தீவினைகள் போகும்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு.