திருநீறு அணியும் முறையின் சிறப்புகள்

திருநீறு அணியும் முறையின் சிறப்புகள்..!

 

திருநீற்றை ஒருவருக்கு நாம் தரும் போதும், இல்லை நாம் பூசிக் கொள்ளும் போதும் சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அனுஷ்டானம், சிவபூஜை செய்வோர் திருநீற்றைத் தண்ணீர் விட்டுக் குழைக்காமல் உச்சி, நெற்றி , மார்பு என இரு தோள்களிலும் பூசிக் கொள்ளுதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் திருநீர் கீழே சிந்துதல் கூடாது. அது போல கோயில்களில் நாம் நெற்றியில் ஈட்ட பிறகு எஞ்சிய திருநீற்றை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதனை , ஒரு இலையில் மடித்து பத்திரப்படுத்தலாம் , முடிந்தால் மற்றவருக்குக் கொடுக்கலாம்.

ஆள்காட்டி விரலால் தொட்டு, பொட்டு போல் பூசுதல் கூடாது. நெற்றி நிறையப் பூசுதல் வேண்டும். அவ்வாறு திருநீற்றை நெற்றி நிறைய பூசும் போது , நமது முன் வினையால், பிரம்மன் நமது தலையில் எழுதியிருக்கும் கெட்ட முன்வினைப் பயன்கள் (மோசமான தலை விதிகள் ) ஈசனின் அருளால் (திருநீர் பூசும் போது) அழிக்கப்படும் என்பது ஐதீகம். அது போல், பையில் உள்ள திருநீற்றை தலைகீமாகக் கவிழ்த்தல் கூடாது, ஈர உடையுடனும், ஒற்றைத் துணி உடுத்திக் கொண்டும், ஆடை இன்றியும் திருநீற்றைப் பூசிக் கொள்ளுதல் கூடாது.

திருநீறு, தருபவர் நிற்க நாம் அதனை உட்கார்ந்து வாங்குதல் கூடாது. திருநீறு பெறும் போது இருகரங்களையும் நீட்டி ஒன்றின் மீது ஒன்றை வைத்தே வலக்கரத்தால் பெறுதல் வேண்டும். ஒற்றைக் கரத்தால் வாங்குதல் கூடாது. வாயைத் திறந்து கொண்டும், தலையை அசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக் கொண்டும், பாரா முகத்துடனும், சிரித்துக் கொண்டும், தலையை கவிழ்த்துக் கொண்டும், நடந்து கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டும் திருநீறு பூசிக் கொள்ளுதல் கூடாது .