தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமா அல்லது தை மாதமா
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்!
தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு சிலரும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு சிலரும் வாதிட்டு வருகின்றனர். அந்நாள் முதல்வர் தை புத்தாண்டு என்று அறிவித்தார்… முன்னாள் முதல்வர் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள சிக்கல் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு
தமிழரின் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்றவை "தை திங்கள்" பற்றி பேசுகின்றன. இவையெல்லாம் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு நாளாக இருந்தன என்பதற்கு சான்று என்கின்றனர்.. அத்துடன் பழந்தமிழர்கள் இளவேனில், முதுவேனில், கார் காலம், கூளிர் காலம், முன்பனி, பின்பனிக் காலம் என்ற பருவ காலத்தைக் கடைபிடித்தனர். இதில் இளவேனில் எனப்படும் தை, மாசி மாதங்களே தமிழர் தம் வாழ்வின் தொடக்க நாளாக கடைபிடித்தனர்…ஆகையால் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்றும் வாதிடுகின்றனர்.
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்
தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.சரி அப்படி எனில் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கடைபிடிக்கும் வழக்கம் எப்போது வந்தது?
சித்திரை புத்தாண்டு வந்தது எப்படி?
பழந்தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் இருந்து, ஆவணி மாதம்தான் புத்தாண்டின் தொடக்கம் என்ற நடைமுறை இருந்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், 15 -ம் நூற்றாண்டில் இருந்து, அதாவது 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்த,விஜய நகரப் பேரரசை ஆட்சி செய்த நாயக்கர்களின் காலத்தில்தான் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.
ஆனால், தமிழறிஞர்கள் எல்லாம் 1921-ம் ஆண்டில் சென்னையிலும், 1935 -ம் ஆண்டில் திருச்சியிலும் கூடியபோது, திருவள்ளுவர் ஆண்டே தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை மாதத்தையே ஆண்டின் தொடக்கமாகவும் அறிவித்தனர். அதை அப்போதே பலரும் ஏற்றுக்கொண்டனர். இயேசுநாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ்ப் புத்தாண்டுதொடங்குவதாகக் கணக்கிடப்படுகிறது..
தமிழ் ஆண்டுகள் அறுபதும் தொடர் வரிசை ஆண்டுகள் அல்ல. சுழற்சிமுறை ஆண்டுகள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும். ஆனால், ஆங்கில ஆண்டு, திருவள்ளுவராண்டு, போல தொடர் வரிசை ஆண்டு அல்ல. இதனால், அறிவியல் அடிப்படையில் ஆண்டுகளைக் கணக்கிடுவது கடினம்.வானியல் அடிப்படையில் பூமியில் தை மாதம்தான் உத்தராயண காலம் தொடங்குகிறது. சித்திரை -1 க்கு இருக்கும் சிறப்பு என்று சொல்வோமானால் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதுதான்.
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல் பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில் புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள். என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும் இதனடிப்படையில்தான்!
தமிழகத்தில் தை முதல் நாள் தமிழர் புத்தாண்டாக ஒருதரப்பும் மற்றொரு தரப்பு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகிற விநோதம் நீடிக்கவே செய்கிறது!