சோழி

சோழி என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வரும் வி‌ஷயம், ஜோதிட ரீதியான பிரசன்ன முறை பார்ப்பது தான். உப்புக் கடலின் ஆழங்களில் உருவாகும் சோழிகளில் அராபிய சோழி, புலி சோழி, முட்டை சோழி, கத்தரிப்பூ சோழி, மான் சோழி, பூனை சோழி, பாம்பு தலை சோழி, மோதிர சோழி, பண சோழி, வெள்ளை சோழி என்று பத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. மகாலட்சுமியின் பிறப்பிடமான கடலில் தோன்றிய காரணத்தால், நமது நாட்டில் ஆன்மிக பயிற்சி மற்றும் பூஜைகளுக்கு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வீட்டில் மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளை செய்யும்போது சோழிகளை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, நவராத்திரி காலங்களில் வீடுகளுக்கு வரும் பெண்கள், தேவியின் வடிவமாக கருதப்பட்டு மஞ்சள், குங்குமத்தோடு சோழிகளை வழங்குவதும் நமது நாட்டில் பல இடங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆன்மிக அருள்

இன்றைய காலகட்டத்தில் வட இந்திய பெண்கள் தங்களது காக்ரா, துப்பட்டா, சோளி ஆகிய ஆடைகளில் சோழிகளை பல்வேறு விதங்களில் கோர்த்து அலங்காரமாக அணிவதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகின்றனர். மேலும், குர்த்தா, டாப்ஸ், சட்டைகள் ஆகியவற்றிலும் பல வண்ண சோழிகளை கோர்த்து அணிவதும் வழக்கத்தில் உள்ளது. குஜராத்தின் ‘பஞ்சாரா’ பழங்குடியினர் தங்களது மணிக்கட்டுகளில் ‘பிரேஸ்லெட்’ போன்று சோழிகளை கோர்த்து அணிவது நெடுங்கால வழக்கம். இடையில் கட்டும் ‘பெல்ட்டு’ வகைகள், காதுகளில் அணியும் ‘ஸ்டட்கள்’, ‘பென்டன்ட்’ எனப்படும் டாலர்கள் மற்றும் கைகளில் அணியும் காப்புகள் ஆகிய பலவற்றிலும் சோழிகளை பயன்படுத்தினால், ஆன்மிக அருள் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.