சுக்கிரனின் காரக விளக்கம்

கிரகங்களில் பிரகாசமான கிரகம் என அழைக்கப்படுவது சுக்கிரனாகும். இந்த கிரகம் உருவத்தில் சிறியதாகவும் இல்லாமல்,பெரியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக உள்ள கிரகமாகும். ஜொலிக்கும் வெண்மை நிறமுடையது சுக்கிரனாகும். சுழற்சி வேகத்திலும், அதிக வேகமுடையது இல்லையென்றாலும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். மற்ற கிரகங்கள் எல்லாம் தன் அச்சில் வலஞ்சுழியாக சுற்றுகின்றன.ஆனால் இந்த சுக்கிரன் மட்டும் தன் அச்சில் இடஞ்சுழியாக சுற்றுகிறது. இந்த கிரகத்திற்கு விடிவெள்ளி என்றும் ஒரு பெயர் உண்டு. காலை நேரங்களில் வானத்தில் பிரகாசமாக தெரிவதால் விடிவெள்ளி என பெயர் பெற்றுள்ளது. 

தினமும் பொழுது விடிவது சூரிய உதயத்தால்தான் என்றாலும், விடிவெள்ளி என்ற பெயர் மட்டும் சுக்கிரனுக்கு போய்விட்டது. அதாவது சுக்கிரனால்தான் பொழுது விடிகிறது என்பது போன்ற  ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. இதனால் சுக்கிரன் வேசக்காரன் என்று அழைக்கப்படுகிறான். வேசம் என்பது ஒப்பனை செய்து கொள்வதை குறிக்கிறது.

இதனால்தான் கலைக்கு காரகன் சுக்கிரன் என கூறப்படுகிறது. கலஞர்கள் எல்லோரும் ஒப்பனை செய்துகொள்பவர்களே. ஆடை, அலங்கார பொருட்கள் அனைத்தும் சுக்கிரனுக்கு உரியவையாகும். இதனால் சுக்கிரனை ஆடை அலங்காரப்பிரியன் என்கிறார்கள்.
மற்ற எல்லா கிரகங்களும் தன் அச்சில் வலஞ்சுழியாக சுற்றுகின்றன,சுக்கிரன் மட்டும் தன் அச்சில் இடஞ்சுழியாக சுற்றுகிறது, எனவே மாற்று வழிகளை காட்டும் கிரகமாக சொல்லப்படுகிறது.

பொதுவாக மனிதர்கள் மரணத்தை வெல்ல முடியாது என்பார்கள், ஆனால் சஞ்சீவினி மூலிகையை கொண்டு மரணத்தை வெல்லலாம் எனக்கூறப்படுகிறது. மாற்று வழி காட்டும் சுக்கிரன் சஞ்சீவினி  மூலிகையைக்குறிக்கிறது. சுக்கிரன் எதிர் பாலாரை(பெண் பாலார்) குறிக்கும் கிரகமாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்களில் அதிகம் ஆடை அலங்காரம் செய்துகொள்வது பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுக்கிரன் பிரகாசமான கிரகம் என்பதால் பார்ப்பதற்கு மினுமினுப்பாய் இருக்கும் இளம் பெண்களை குறிக்கிறது. 

பணம் என்பது ஒரு மதிப்புதானே ஒழிய அது ஒரு குறிப்பிட்ட பொருள் ஆகாது. ஒரு கிலோ அரிசியின் விலை 60 ரூபாய் என்றால், ஒரு கிலோ அரிசியானது 60 ரூபாயாக பாவிக்கப்படுகிறது. அரிசியை தின்பதாலேயே பசி அடங்குகிறது. 60 ரூபாயை தின்றால் பசியடங்காது. 60 ரூபாய் என்பது ஒரு வகையில் அரிசியைப்போல் வேசம் போடுகிறது. எனவே பணத்தைக்குறிப்பது சுக்கிரனாகும். அதாவது ஒரு பொருளுக்கு ஈடானது போன்று இணை வைக்கப்படுவதை சுக்கிரன் குறிக்கிறது. 

உலோகங்களில் வெண்மையாகவும்,ஜொலிப்பாகவும் இருக்கும் வெள்ளி, ரத்தினங்களில் வெண்மையாகவும், ஜொலிப்பாகவும் இருக்கும் வைரம் போன்றவை சுக்கிரனுக்கு உரியவையாகும். உடலிலிருந்து உற்பத்தியாகும் விந்து வெண்ணிறமாகவும், ஜொலிப்பாகவும் இருப்பதால் விந்துவுக்கு அதிபதி சுக்கிரனாகும். 

ஜொலிக்கும் பொருட்களான ஜரிகை, ஜிகுணா, பட்டு வஸ்திரம்,தங்கம்,வெள்ளி நகைகள்  போன்றவை சுக்கிரனுக்கு உரியவையாகும். மனிதர்கள் ஒப்பனை செய்துகொள்ளும்போது முகத்திற்கு மட்டுமே அதிகமாக ஒப்பனை செய்கிறார்கள். இயற்கையாக உள்ள முகத்தைக்காட்டாமல் , முகத்தில் மட்டும் அதிகம் சாயம் பூசிக்கொள்கிறார்கள். எனவே மனித உடலில் முகத்தை குறிப்பது சுக்கிரனாகும். முகத்தில் குறிப்பாக கன்னத்தில் அதிக சாயம் பூசப்படுகிறது எனவே கன்னத்தைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.

 
பிறரால் நடப்பதை தன்னால் நடப்பதுபோல் காண்பிப்பது சுக்கிரனின் இயல்பாகும்.அதாவது தன்னால் பொழுது விடியவில்லையென்றாலும் , தன்னால்தான் பொழுது விடிகிறது என்பது போல் காட்டிக்கொள்வது. இதன் படி, தான் நடக்காமல் பிறரை நடக்கவைப்பது சுக்கிரனின் செயலாகும். குதிரை சவாரி, வாகன சவாரி போன்றவை சுக்கிரனின் செயல்களாகும். இதில் மனிதன் நடப்பதில்லை ,குதிரைதான் நடக்கும். பிறரை நகர வைத்து தான் நகர்வது போல் காட்டிக்கொள்வது. 

மனித உடம்பிற்குள் மனித உடம்பு விந்து வடிவத்தில் சென்று வசிக்குமிடம் பெண்ணின் கருப்பையாகும். எனவே பெண்ணின் கருவறை சுக்கிரனாகும். இதுபோல் மனிதர்கள் தங்கும் இடமான வீடுகளும் சுக்கிரனுக்கு உரியவையாகும். 

பொதுவாக மனித உடம்பில் உடல் கழிவுகளை வெளித்தள்ளும் உறுப்புகளே உள்ளன. ஆனால் பெண்ணின் கருப்பை மட்டும் விந்து நீரை உள்ளுக்குள் உறிஞ்சிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது தன் அச்சில் சுக்கிரன் இடஞ்சுழியாக சுற்றும் தனித்தன்மையை காட்டுகிறது. பெண்ணின் கருப்பையில் உயிர் வளர்கிறது ,  எனவே கருப்பையை குறிக்கும் சுக்கிரன் பெண்களுக்கு ஜீவக்காரகனாக சொல்லப்பட்டுள்ளது. 

விடியல் சூரியனால்தான் வருகிறது என்றாலும், சுக்கிரனால் விடியல் வருவதுபோல் ஒரு மாயை உள்ளது. இது ஒரு வகையில் நம்பிக்கை சார்ந்த விசயங்களை குறிக்கிறது. சிலர் மருந்தினால் நோய் குணமாகவில்லை, மந்திரத்தினால் குணமானது என்பார்கள். எனவே நம்பிக்கை மருத்துவத்தை சுக்கிரன் குறிக்கிறது.மருந்தில்லா மாற்று மருத்துவ முறைகள் அனைத்தும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும்.