காமமும் தட்சிணாயணகால விரதமுறைகளும்
காமம் என்றவுடன், இங்கு நான் காம சாஸ்திரம் பற்றி எழுதப்போகிறேன் என்று அர்த்தமல்ல. பொதுவாழ்வில் ஆண்/பெண் உணர்வுகள் மற்றும் தன்மைகள் குறிப்பிட்ட காலங்களில் எவ்வாறு செயல்படும் என்பதை சாஸ்திர விதிகளுடன் தொடர்புபடுத்தி எம்மால் இயன்றவரை விவரிக்கப்போகிறேன். அவற்றை நண்பர்கள் முடிந்தவரை உள்வாங்கி உணர முயற்சி செய்யவும். மேலும் இது அனைவரும் கட்டாயம் படித்தறிய வேண்டிய, சாஸ்திர விதிகளை உள்ளடக்கிய உண்மைப்பதிவாகும்.
காரணம், சாஸ்திரம் வகுத்த நம் முன்னோர்கள் முட்டாள்கள் அன்று! ஆனால் சாஸ்திர விதிகளில் எந்த ஒரு விதிமுறையைப் பற்றிய நேரடியாகச் சொல்லப்படவில்லை. அதாவது, காரணத்தை மறைத்து காரியத்தை மட்டும் செய்யச் சொல்லியிருப்பார்கள். இதுதான் சாஸ்திரம் கூறும் விதி. இதை வழுவாமல் இப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே சாஸ்திர விதிமுறை என்பது போலிருக்கும்.
அதுபோலவே நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பருவகால மாற்றத்தை நம் முன்னோர்கள் கணக்கிட்டு, அதனைச் சார்ந்த வாழ்வாதாரக் கொள்கை முறைகளை சாஸ்திரமாக வகுத்தனர். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் என்பது சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களைக் குறிப்பவையாகும். இதன் மொத்தம் 360 பாகைகளை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும்.
இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது எனில், சூரியன் ஒரு ராசியல் இருக்கும்போது அதன் எதிர்நிலையான ஏழாம் பாவத்தில் (180 பாகைகள்) சந்திரன் வரும் காலம் பௌர்ணமியாகும். அப்போது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது அது முழுமையாகப் பிரகாசிக்கும். அந்த குறிப்பட்ட நட்சத்திரங்களையே தமிழ் மாதங்களின் பெயர்களாக குறிக்கப்பட்டது. உதாரணமாக,
தமிழ்மாதம் − பௌர்ணமி நட்சத்திரம்
1. சித்திரை − சித்திரை (சித்ரா பௌர்ணமி)
2. வைகாசி − விசாகம்
3. ஆணி − மூலம்
4. ஆடி − உத்திராடம்
5. ஆவணி − அவிட்டம்
6. புரட்டாசி − உத்திரட்டாதி
7. ஐப்பசி − அஸ்வினி
8. கார்த்திகை − கார்த்திகை (திருக்கார்த்திகை)
9. மார்கழி − திருவாதரை
10. தை − பூசம்
11. மாசி − மகம்
12. பங்குனி − உத்திரம்
மேற்கண்ட நட்சத்திரத்தன்று ஏற்படும் பௌர்ணமி காலத்தில் பூமியில் கிடைக்கும் சக்தியோ ஏறாளம். அக்காலங்களில் ஏற்படும் இயற்கையின் அளப்பரிய சக்தியை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அந்தந்த மாதங்களில் அக்குறிப்பட்ட நட்சத்திரங்களின் பெயரில் விரத முறைகளும், விழாக்களும் எடுக்கப்பட்டது.
இது தவிர மகர ராசியான தை மாதம் முதல், மிதுன ராசியான ஆணி மாதம் வரை உத்திராயணம் எனவும், கடக ரிசியான ஆடி மாதம் முதல் தணுசு ரிசியான மார்கழி வரை தட்சிணாயணம் எனவும் குறிப்பட்டார்கள். காரணம் உத்திராயண காலத்தில் சூரியன் வடக்கு நோக்கியும், தட்சிணாயண காலத்தில் தெற்குநோக்கியும் பயணிப்பார். இதில் விசேஷம் என்னவெனில் சூரியன் தை மாதத்திலிருந்து ஆணி நோக்கி பயணிக்கும் உத்ராயண காலம் உஷ்ணம் மிகுந்தும், ஆடியிலிருந்து மார்கழிவரை பயணிக்கும் தட்சிணாண காலம் "குளிர்ச்சி" மிகுந்து காணப்படும். ஏனெனில், உஷ்ண காலங்களில் சூரியன் பூமிக்கு அருகிலும், குளிர்ச்சியான காலங்களில் சூரியன் பூமியைவிட்டு விலகியும் இருப்பார்.
இங்குதான் பதிவின் காமப் பகுதியே ஆரம்பகிறது. இதற்கும் உடலில் உண்டாகும் காம எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என ஐயம் வரலாம். நிச்சயம் இருக்கிறது. அது எவ்வாறெனில் நம் ஆத்மாவானது ஐவகை அக்கினிகளைக் கொண்டெழுப்பும் தன்மை கொண்டது எனக்குறிப்பிட்டுள்ளேன். அந்த ஐவகை அக்கினிகளே நம் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கி கட்டுக்குள் வைக்கிறது. அவை,
ஐவகை_அக்கினிகள்:
1. போகாக்கினி (பசியுணர்வு)
2. மோகாக்கினி (மோக உணர்வு)
3. காமாக்கினி (காம உணர்வு)
4. தாபாக்கினி (பேராசையுணர்வு)
5. ஞானாக்கினி (ஞானம்)
ஆன்மாவின் இந்த வெப்பச் சமநிலைக்கும், பூமியில் சூரியனின் பருவகால மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், உத்ராயணமான உஷ்ண காலத்தில் நம் உடலின் வெப்பநிலையானது குறைந்தும், தட்சாயிணாயிணமான குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையானது அதிகரித்தும் காணப்படும். அதாவது நம் ஆத்மாவானது புறத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்போது அகத்தில் வெப்பத்தைக் குறைத்தும், புறத்தில் வெப்பம் குறைந்து இருக்கும்போது அகத்தில் வெப்பத்தை அதிகரித்தும் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கும்.
விசயம் என்னவெனில் எப்போது உடலின் வெப்பநிலை ஆத்மாவால் கொண்டெழுப்படுகிறதோ அப்போதெல்லாம் உடலில் காம இச்சை பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக சூரியன் பூமியைவிட்டு 151 பாகை முதல் 270 பாகை வரையிலான தட்சிணாயின காலம் என்பது புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலமாகும். இந்த மாதங்களில் புவியில் ஜனிக்கும் உயிரினங்களுக்கு இப்பெருக்க காலமாகும். அதாவது அந்தக் காலங்களில் அதிகப்படியான காம இச்சைகள் ஆத்மாவால் கொண்டெழுப்பப்பட்டு உயிர்களிடத்தில் இனவிருத்தி உண்டாகும்.
பூமியிலுள்ள உயிரினங்கள் எனில், இதில் மனிதர்களும் அடக்கம். நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரக் காலங்களில் ஏற்படும் பௌர்ணமியானது பூமியில் அளப்பரிய சக்தியை உண்டாக்கும் என குறிப்பிட்டிருந்தேன். அந்த சக்தியானது நம் உடலின் வெப்ப சக்தியும் சேர்ந்துவிட்டால் நம்மில் வெளிப்படும் சக்திக்கு ஓர் வரையறை இருக்காது. அதாவது கட்டுக்கடங்காத காமம் கொண்டெழுப்பட்டு ஒரு வரைமுறையற்ற உறவுமுறையை ஏற்படுத்திவிட வழிவகுக்கலாம். அதானாலேயே, புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலத்தில் அதிகப்படியான விரத முறைகளும், விழாக்களும் இறைவனின் பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் மற்றும் நவராத்திரி சக்தி/விஜயதசமி நோன்பும், ஐப்பசியில் தீபாவளிப்பண்டிகையும், #கார்த்திகையில் திருக்கார்த்திகை விரதமும், ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணியதலும், மார்கழியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை நோன்புகளும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்பட்டு காமசிந்தனை உணர்வுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதுவே நம் முன்னோர்கள் வகுத்த அதிவிஞ்ஞான சாஸ்திரமாகும்.
இதில் மேலும் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், புரட்டாசியானது ஆண்களுக்கும், மார்கழியானது பெண்களுக்கும் உரித்தான காலமாகும். அதாவது புரட்டாசியில் ஆணின் உணர்வுகள் வக்கிரமாகவும், மார்கழியில் பெண்ணின் உணர்வுகள் வக்கிரமாகவும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் இருவரின் உணர்வுகள் சமநிலையிலும் இருக்கும். அதனாலேயே புரட்டாசி மாதம் ஆண்களின் விரத காலமாகவும், மார்கழிமாதம் பெண்களுக்கு திருப்பாவை நோன்பு காலமாகவும் பிரித்தரியப்பட்டது. இவ்விரண்டு மாதங்களிலும் களத்திரக் (திருமண) காரகரான பெருமாளே பிரதானக் கடவுளாகும்.