எதிரியின் மனதிலும் இடம்பிடியுங்கள்

எதிரியின் மனதிலும் இடம்பிடியுங்கள்

 

      ஒரு புத்திசாலியான  பலசரக்கு வியாபாரி.  சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது கடையில் வியாபாரம் அமோகமாக  நடைபெற்றது. அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாடத்தேவைகளுக்காக அந்தக்கடைக்கு வந்துகொண்டே இருந்தனர். இதனால் கடைக்காரர் வெகு மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் அந்தக்கடையின் எதிர்ப்பக்கம் புத்தம் புதிய சூப்பர் மார்க்கெட் ஒன்று திடீரென்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த சூப்பர் மார்க்கெட் பல நவீன வசதிகளுடன் இருந்தது. அதைப்பார்த்து அந்த பலசரக்கு கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சூப்பர் மார்க்கெட்டால் தனது கடையில் வியாபாரம் சரிந்துவிடுமோ என்று கண் கலங்கினார்.

 

இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்க தனது குருவிடம் சென்றார் கடைக்காரர். குருவிடம், ஐயா, எங்கள் குடும்பம் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இந்த பலசரக்கு கடையை நடத்தி வருகிறது. இப்போது அதற்கு ஆபத்து வந்துவிட்டது. அந்த கடையில் வியாபாரம் சரிந்துவிட்டால் எனது குடும்பம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் எனக்கு இதைத்தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது என்று வருத்தத்துடன் தெரிவித்தார். நீ அந்த சூப்பர் மார்க்கெட் முதலாளியைப்பார்த்து பயந்தால் உனக்கு அவர் மேல் வெறுப்புதான் ஏற்படும். அந்த வெறுப்பு உன்னுடைய அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்றார் குரு. இதைக்கேட்டு திகைத்த கடைக்காரர், குருவே நான் என்னதான் செய்வது? என்று கேட்டார். தினந்தோறும் அதிகாலையில் உன் கடை முன்பு நின்று கொண்டு கடவுளை வணங்கு. கடவுளே, எனது கடையில் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும், நிறைய செல்வம் குவிய வேண்டும் என்று பிரார்த்தனை செய். பின்னர் அந்த சூப்பர் மார்க்கெட் இருக்கும் திசையில் திரும்பி நின்று, அந்தக்கடைக்காரரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்று ஆலோசனை சொன்னார் குரு. இதைக்கேட்டு கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். குருவே எனக்கு போட்டியாக வந்தவருக்கும் நான் பிரார்த்தனை செய்ய வேண்டுமா?என்று கோபத்துடன் கேட்டார். எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நீ பிரார்த்தனை செய்தால், உனக்கு நல்லது நடக்கும். அடுத்தவனுக்கு கேடு வரவேண்டும் என்று சாபமிட்டால் அந்த கேடு உனக்கே திரும்பி வரும் என்று குரு அமைதியாக சொன்னார். ஒரு ஆண்டுக்குப்பின் அந்தக்கடைக்காரர் குருவை சந்தித்தார். நான் பயந்தது போலவே நடந்து விட்டது. எனது கடையை மூடும் நிலை வந்துவிட்டது என்றார் அந்தக்கடைக்காரர். கேள்விகள் அந்த பலசரக்கு கடைக்காரர் தனது கடையை ஏன் மூடினார்? இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன? விடைகள் இப்போது அவர் தான் சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி. எனவே அவர் தனது பழைய கடையை மூடிவிட்டார்.

 

இந்த உலகில் நாம் எவருமே தனியாக வாழவில்லை. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்துள்ளன. இதுவொரு அறிவியல் உண்மை. நாம் உணரும் அனுபவங்கள், நாம் அளிக்கும் உபசரிப்புகள் போன்றவை இந்த பிரபஞ்சம் நெடுக, ஊடுருவிப்பாயும். ஒருவரைப்பற்றிய நல்லெண்ணங்கள், அவர் அறியாமலேயே அவரைச் சென்றடையும். நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு விதத்தில் அடுத்தவரின் எண்ணங்களை உணர்கின்றோம். அது நல்லதோ, அல்லது தீயதோ எதுவாக இருந்தாலும் சரி. நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இந்த தவிர்க்க முடியாத செயல்பாடு நமது வாழ்க்கையில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அந்த பலசரக்கு கடைக்காரர், சூப்பர் மார்க்கெட் முதலாளியை வெறுக்கவில்லை. மாறாக தினந்தோறும் அவரை வாழ்த்தி வந்தார். இதனால் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். விரைவிலேயே அந்த பலசரக்கு கடைக்காரர் அந்த சூப்பர் மார்க்கெட்டின் ஒரு பங்குதாரர் ஆனார். பலசரக்கு கடை நடத்தி அனுபவம் உள்ளவர் என்பதால் அவரால் சூப்பர் மார்க்கெட்டை திறம்பட நடத்த முடிந்தது. இதைப்பார்த்த அந்த முதலாளி, சூப்பர் மார்க்கெட்டின் அனைத்து உரிமைகளையும் அந்தபலசரக்கு கடைக்காரரிடமே விற்றுவிட்டு, மகிழ்ச்சியுடன் அந்த நகரைவிட்டுச்சென்றார்.

எனவே நாம் அனைவரையும் வாழ்த்தி வளமுடன் வாழ வேண்டும்.