இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் எண்ணங்களே…
எண்ணங்களை உண்டாக்குவதும் வைத்துக்கொள்வதும் எண்ணமே. அவை புறச்சூழ்நிலைகளால் உருவானவை அல்ல. உள் மனதின் பிரதிபலிப்பு. அவற்றிற்குக் காரணம் கடவுளோ சாத்தானோ சூழ்நிலையோ அல்ல. எண்ணங்களே, எண்ணங்கள் ஊடுருவிய செயல்களைத் தொடர்ந்து இன்பமோ துன்பமோ மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை வந்து அடைகிறது. செயல்கள் என்பது கண்களுக்கு தெரியும் எண்ணங்களின் உருவமே.மனத்தின் வேரூன்றிய எண்ணங்கள் நம் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
நம் பழக்க வழக்கங்களின் மூலமாக நாம் இன்பத்தையும் துன்பத்தையும் அறுவடை செய்கிறோம். தன்னுடைய வாழ்வின் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புபவன், அதற்கு ஏற்றபடி தன் எண்ணங்களையும், மனப்பார்வையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட வாழ்வில் உள்ள தீய பழக்கங்களிலிருந்த விடுபட்டு, வேரூன்றிய தீய எண்ணங்களைக் களைதால் துன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வான். நல் எண்ணங்களை விதைத்து நற்பழக்கங்களை வழக்கங்கள் ஆக்கிக் கொண்டு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்வான்.
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.
"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.
எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.
எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.
நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும், இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!