வாஸ்து மரங்கள் நடுவதால் பிரச்சனைகள் குறையுமா ?
இன்றைய அவசர உலகத்தில் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்றும் எங்கு போனால் பிரச்சனைகள் தீரும் என்றும் தேடும் மனிதர்கள் அதிகமாகி விட்டார்கள்.
ஏமாற்றும் சிலர்
பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடுபவர்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கூட்டம் பரிகாரம் என்ற பெயரில் பரிகாரப் பொருட்களையும், வாஸ்து மரங்களையும் கொள்ளை லாபத்திற்கு விற்று வருகிறது.
அதாவது உங்கள் வீட்டில் எந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் கொடுக்கும் ஒரே ஒரு மரத்தை உங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் நட்டு வைத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று கூறி அதிக விலைக்கு ஒரு சாதாரண மரத்தை விற்று விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம். அதற்கு பதில் மாமரம், தென்னை மரம், வேப்பமரம் என்று ஏதாவது ஒன்றை நட்டு வைத்தாலாவது பலன் உண்டு .
ஏமாந்த பலர்
என்னுடைய அனுபவத்தில் இந்த மரங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாந்து போனவர்களைப் பார்க்கும் பொழுது, மனம் மிகவும் வேதனைப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரம் உள்ளது என்று எவர் கூறினாலும், அதை நம்ப வேண்டாம். எந்த ஒரு வாஸ்து நிபுணர் பரிகாரம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறாரோ உண்மையில் வாஸ்துவில் முன் அனுபவமோ அல்லது தேர்ந்த திறமையோ கொண்டவரா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களிடம் இருந்து நீங்கள் சற்று விலகியே இருங்கள்.