வாஸ்துப்படியான வர்ணங்கள் மனநிலையை மாற்றுமா

வாஸ்துப்படியான வர்ணங்கள் மனநிலையை மாற்றுமா ?

புரிந்து கொள்ளல்

நாம் காதால் கேட்டுப் புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதிலும் அதே சமயம் ஆழமாகவும் பதியும். அதனால்தான் பாடத்திட்டத்தில் கூட மாணவர்கள் படிப்பதை மாணவர்களே செயல் முறை வடிவில் செய்து பார்த்து புரிந்துகொள்ள (Practicals) கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்கள்.

 

காணும் காட்சிகள்

நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியே மனதில் நிறுத்திக் கொள்ளும், பின்னொரு சமயத்தில் அந்த பிம்பத்தின் பெயரைக் கேட்டாலே போதும் நம் கண் முன்னே அந்த பிம்பம் வந்து செல்லும். அதுதான் நமது எண்ணத்தின் காட்சிப்படுத்தும் சக்தி ஆகும்.

 

கடவுளும், படைப்பும்

இது எதற்காக கூறப்படுகிறது என்றால், நம்மைப் படைத்த கடவுள், நாம் காணக்கூடிய அனைத்து பொருட்களையும், உயிரினங்களையும் கருப்பு, வெள்ளையாக உருவாக்கியதோடு மட்டுமின்றி அதை மேலும் பல வர்ணங்களில் உருவாக்கியுள்ளான். நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும் பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன.

எடுத்துக்காட்டாக பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி , வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின் மகிழ்ச்சி , நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற  பொழுது கிடைக்கின்ற புத்துணர்வு என மனநிலையில் பல்வேறு வகை உணர்வுகள் தோன்றுகின்றன.

 

மனதில் தோன்றும் உணர்வுகள்

இது போன்ற உணர்வுகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை உள்ளது. அதைச் சரியாக வெளிப்படுத்துவதும், தவறாக வெளிப்படுத்துவதும் நாம் வீட்டிற்கு பூசும் வர்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன.

 

வர்ணங்களின் தேர்வு

பொதுவாக நாம் எல்லா அறைகளுக்கும் ஒரே நிறத்தைத் தேர்வு செய்து பூசுவது . உண்டு. அப்படிச் செய்யும்பொழுது ஒரே மாதிரியான மனநிலை நமக்கு ஏற்படும். ஆனால் நாம் வேலை செய்யும் பொழுது இருக்கும் மனநிலை உறங்கும் போதோ, சமைக்கும் போது இருக்கும் மனநிலை ,

படிக்கும் போதோ இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை . அதுமட்டுமின்றி இப்பிரச்சனைகளை சரி செய்வதே குறிப்பிட்ட அறைகளில் நாம் பூசும் நிறங்கள்தான்.

சரி அப்படியானால் எந்தெந்த அறைக்கு எந்தெந்த நிறங்கள் பூச வேண்டும் என்று பார்க்கும் பொழுது, கட்டிடத்தின் வெளிப்பகுதிக்கு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சளே சிறந்தது. கட்டிடத்தின் உள்ளே வரவேற்பறைக்கு Office White எனக் கூறப்படும் வெள்ளை நிறமும், படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஊதா நிறமும், சமையலறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஆரஞ்சு நிறமும், படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் பச்சை நிறமும், சிறப்பானவையாக இருக்கும்.

ஆகவே, நம் வீட்டில் பூசும் வர்ணங்களைக் கொண்டு நம் எண்ணங்களை அழகுறத் தீட்டுவோம், வாழ்வில் ஏற்றம் பல பெறுவோம்.