மிதுன லக்ன பொது பலன்கள்

மிதுன லக்ன பொது பலன்கள்

 

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உயரமான தேகம் கொண்டவர்கள். பரந்த நெற்றியும், பலமான தோள்களும், அழகான புருவங்களும்,கருத்து நீண்ட கண் இமைகளும் பெற்றவர்கள். பிறரை வசீகரிக்கத்தக்க தனித்த சக்தியைப் பெற்ற இவர்களின் கண்கள் அழகைக்கொண்டவை. சோம்பலாக காலம் கழிக்க விரும்ப மாட்டார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டவர்களாகவே காணப்படுவார்கள். கருத்த நிறமும், மெலிந்த தேகமும் கொண்ட இவர்களது மூக்கு உயர்ந்து இருக்கும். கோபம் கொண்டாலும் அதை மறைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டு பேசும் இவர்கள், பிறரை எளிதில் நம்பாத சந்தேகமும், பயந்த சுபாவமும் கொண்டவர்கள். சிறிய விவகாரமானாலும் சுயமாக பிறர் உதவியின்றி இவர்களால் செய்ய இயலாது. பலரது யோசனைகளைக் கேட்டு தெரிந்து கொண்டாலும், தனது அபிப்பிராயத்தை வெளியிடமாட்டார்கள். எதையம் சீக்கிரம் கிரகித்துக் கொள்வார்கள். ஆனால் துணிந்து எதிலும் ஈடுபடமாட்டார்கள். வெளித்தோற்றத்திற்கு வெகுளியாகவும், ஏமாளியாகவும் காணப்படும் இவர்கள் நயமாகவே சிரித்துப்பேசி, தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளும் காரியவாதிகள் என்றால் மிகையாகாது.

அதிகம் உழைக்காமல் பிறர் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஈடுபடும் காரியங்களில் வெற்றி காண்பார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களிடம் தொடர்பை அறுத்துக்கொள்வார்கள்.

இவர்களின் விரோதிகளுக்கு ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் நகையாடுவார்கள். கூர்மையான, புத்திசாதுர்யம் நிறைந்த இவர்கள் எதிலும் தான்  மாட்டிக்கொள்ளாமல் நடுநிலை பெறுவார்கள். அவசர அவசரமாக எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்கிற துடிதுடிப்பு இவர்களிடம், காணப்படும். அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் நிறைந்தவர்கள்.  இவர்களுடைய பேச்சில் வேடிக்கையும், கிண்டலும் நிறைந்திருக்கும். சாதூர்யமாகப் பேசி தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற இவர்கள், பிறரை ஏளனமாகப் பேசுவதிலும், நையாண்டி சாமர்த்தியச்சாலிகள். சாஸ்திர ஆராய்ச்சி விஷயங்களில் வெற்றி பெறுபவர்கள். சமயத்திற்கேற்றார்போல் பிறரோடு ஒத்துழைக்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள். இவர்களுக்குத் தனிமை புடிக்காது. குடும்பத்தில் தோன்றியவர்களாயினும் சிறுவயதிலிருந்தே குடும்பப் பொறுப்பில் ஈடுபட வேண்டியதாக இருக்கும்.

வயது வளர வளர பொறுப்புக்களும் அதிகமாகும். கடன் வாங்கித் தாராளமாக செலவு செய்வார்கள். ஆடம்பர வசதிகளைத் தாராளமாக அமைத்துக் கொள்வார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது விருப்பங்களை பூர்த்திசெய்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணவசதி குறைந்து காணப்பட்டாலும் தங்களது சுகமும், சுயதேவையும் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள்.

சகோதர, சகோதரிகளுக்காக பாடுபட்டு உழைப்பவர்களாயினும், அவர்களால் இவர்களுக்கு கவலைகள் அதிகம். ஒரே மூச்சில் எந்திரத்தைப் போல் உழைப்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடின உழைப்பை ஏற்காததும், எளிமையான வேலைகளில் அதிகம் ஈடுபடுவதிலும் இவர்களது திறமை பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் பிறருடன் பழகி, சாதிக்கும் காரியங்களிலும், ஏஜென்சி, காண்ட்ராக்ட், கமிசன் போன்ற பணிகளிலும் திறமையானவர்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் உயர்தரக் கல்வி சிறப்பு பெறாவிட்டாலும், எதையும் கூர்ந்து கவனித்து கற்றுணரும் ஆற்றல் பெற்றவர்கள். இசை, இலக்கியம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். வாழ்க்கையில் பல்வேறு கஷ்ட நஷ்டங்களும், தீர்க்கமான ஆயுளைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.