சொத்துக்களை பிரிப்பதில் இவ்வளவு சிக்கலா

சொத்துக்களை பிரிப்பதில் இவ்வளவு சிக்கலா?

கேள்வி : ஐயா, வணக்கம். நான் சென்னையில் வசிக்கிறேன். நாங்கள் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது மிக சந்தோஷமாக வசித்தோம். எங்களுடைய மாடி வீட்டை 4 சம பாகமாக பிரித்து ஆளுக்கு ஒரு மூலையில் வீட்டை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு எங்களுடைய வாழ்வில் மிக மோசமான துன்பங்களை நாங்கள் அனுபவிக்கிறோம். நான்கு பேரும் பணக்கஷ்டத்தில் உள்ளோம். ஆலோசனை கூறவும்.

 

பதில் :

நண்பரே! வணக்கம். ஒரு வீட்டில் அண்ணன், தம்பி என இருவர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது சந்தோஷங்களும், துக்கங்களும் எல்லோராலும் சமமாக பங்கிட்டு கொள்ள முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்கள்.

கூட்டுக்குடும்ப சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும்போது அனுபவப்பட்ட வாஸ்து நிபுணரின் ஆலோசனை மிக மிக அவசியம்.

ஒரு சொத்தை பிரிக்கும்போது வீட்டின் மூத்தவர்களுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியை கொடுப்பார்கள். வீட்டின் இளையவர்களுக்கு வடக்கு அல்லது கிழக்கு பகுதியை தருவார்கள்.

இரண்டு மாடி வீடுகள் என்றால் மேல் மாடி வீடுகளை அண்ணனுக்கும், கீழ் தளத்தை தம்பிக்கும் பிரித்து கொடுப்பார்கள்.

உங்களது வீட்டை நான்கு சமமாக பிரித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை உங்களது வீட்டில் உருவாக்கி இருப்பீர்கள்.

 

1. வீட்டை இருசமமாக பிரிக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு பகுதியை ஒருவருக்கு பிரித்து கொடுத்திருப்பீர்கள். அப்போது தெற்கு அல்லது மேற்கு பகுதியில் உள்ளவர்களுக்கு கிழக்கு அல்லது வடக்கு முழுவதும் மூடப்பட்ட வீடாக மாறிவிடும்.

2. தெற்கு அல்லது மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு முக்கிய வாசல் அமைப்பை உருவாக்கும்போது அது மொத்த வீட்டின் அமைப்பிற்கு நீச்ச வாசலாக மாறிவிடும்.

3. அதேபோல், வடக்கு பாகத்தில் உள்ளவரின் சமையலறை தெற்கு பாகத்தில் உள்ளவருக்கு வடகிழக்கில் வரும்.

4. கிழக்கு பாகத்தில் உள்ளவரின் கழிவறை மேற்கு பாகத்தில் உள்ளவருக்கு வடகிழக்கில் வரும்.

நான் மேற்கூறிய சில அமைப்புகளை தாண்டி இன்னும் குறிப்பிடும்படியான பல தவறான அமைப்புகள் வரும்.

ஒரு வீட்டை இரு சம பாகமாகவோ அல்லது நான்கு சம பாகமாகவோ பிரிக்கும்போது ஒரு குடும்பம் வளர்ச்சியை நோக்கியும் மற்றொரு குடும்பம் வீழ்ச்சியை நோக்கியும் பயணப்படுவார்கள். இது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு தெரிய வரும். அதற்குள் வாழ்க்கையின் பாதை வேறு வழியில் பயணித்துவிடும்.