எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… ஒரு வாசகர் குமுறல் – தினமலர்

 

முன்பெல்லாம் குடும்ப மருத்துவர் என்றால், கூப்பிட்ட குரலுக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். இன்றோ எந்த ஆபத்தான கட்டமாயிருந்தாலும், நாம்தான் ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கிக் கொண்டு, ‘கால் டாக்ஸி’யோ அல்லது ‘ஆட்டோ’வோ வைத்துக் கொண்டு, கொள்ளைக் கட்டணம் அழுது, அவரது ‘க்ளினிக்’ சென்று அரைநாளாவது காத்திருந்து வைத்தியம் செய்து கொள்ளும் அவல நிலை.
எந்த மருத்துவரும் பணம் பிடுங்குகிறார்களே தவிர, ‘பில்’ தருகிறார்களா? வேண்டுமானால் ‘ரீ-எம்பர்ஸ்மென்ட்’ வசதிக்காரகளுக்கு தரலாம். முன்பு ஒரே வைத்தியர் ‘ஜெனரல் பிராக்டீஷனர்’ எந்த வியாதி என்றாலும் நம்பகமான மருத்து எழுதித் தருவார். இப்போது தன்னோடு படித்த ‘மற்ற துறை ஸ்பெஷலிஸ்ட்’க்கு நம்மை சிபாரிசு செய்து அனுப்பி விடுகிறார்.
இந்த கொடுமையில் இருந்து அரசு மருத்துவம்னைக்கு செல்லலாம் என்றால், பல இடங்களில் மருத்துவர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கும். மருந்தோ, பரிசோதனைக் கருவிகளோ, செயல் இழந்து இருக்கும். சுகாதாரம் மலிந்து கிடக்கும். காய்ச்சாலோடு போனால் வயிற்று போக்கோடு திரும்பி வரும்படியான நிலையில்தான் அரசு ஆஸ்பத்திரியின் ‘நலன்’ பராமரிக்கப்படுகிறது. இதனால்தானே, நமது அமைச்சர் பெருமக்களும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்து கொள்கின்றனர்.

காக்க வைப்பதேன்?:


எல்லா சந்தேகங்களையும் தீர்க்கவிட்டாலும் குறைந்த பட்சம் எனது இந்த சந்தேகங்களையாவது தீர்க்க பாருங்களேன்…
*இந்த அளவிற்கு உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறியும் கூட இன்னமும் உங்கள் கிளினிக்கில் மணிக்கணக்கில் காத்திருக்க செய்கின்றீர்களே,அது நியாயம்தானா… ஒரு நோயாளியை குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதில் உங்களுக்கு என்னதான் பிரச்னை. பத்து நிமிடம் முன் பின் இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் காலையில் வந்தவர்கள் மதியம் சாப்பிடக்கூட போகாமல் டாக்டர் இப்ப கூப்பிட்டுருவாரு என்று பரிதாபமாக காத்திருப்பது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
*தகுதியான மருத்துவரை பார்க்க சொல்லி ஊடகங்கள் சொல்கின்றன ஆனால் யார் தகுதியான மருத்துவர் என்பது தெரியவில்லையே முதுகுவலிக்கு உடனே ஆபரேஷன் செய்யவேண்டும் என்று ஒரு சாரரும், யார் ஆபரேஷன் செய்யச் சொன்னது சுத்த மடத்தனம் இதை மருந்திலேயே சரி செய்துவிடலாம் என்று ஒரு சாரரும் இப்படி ஒரே நோயாளிக்கு மாறி, மாறி வைத்தியத்தை சென்னையில் உள்ள கார்ப்பரேட் ரக ஆஸ்பத்திரி டாக்டர்களே சொன்னால் இவர்களைத் தாண்டி சாமன்ய மக்கள் எப்படி தகுதியான டாக்டர்களை தேர்வு செய்வார்கள்.

லேப் டெஸ்ட்டுகள் நிலை:


*முன்பு போல இப்போது இல்லை, லேப் டெஸ்டுக்கு பல ஆயிரம் கொடுக்கவேண்டி உள்ளது. ஆனால் அந்த லேப் டெஸ்டை எடுத்துக்கொண்டு வேறு ஒரு டாக்டரானவரிடம் வந்தால் அதை தொட்டுக்கூட பார்க்காமல் நீங்கள் ஒரு லேப்பிற்கு அதே டெஸ்ட்டுகளை எழுதி தருகீறீர்களே இது என்ன நியாயம்? வேண்டுமானால் லேப் தரும் கமிஷனைக்கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பழைய டெஸ்ட் ரிப்போர்டை பாருங்கள்.
*நீங்கள் எழுதும் மருந்து, மாத்திரைகள் உங்கள் கிளினிக்கினுள் வைத்துள்ள மருந்து கடைகளிலோ அல்லது நீங்கள் எழுதும் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கிறது, இதனால் வெளியூர் போகும் நோயாளிகள் அந்த குறிப்பிட்ட மருந்து கிடைக்காமல் படும் அவதிபற்றி உங்களுக்கு தெரியுமா?
*பொதுவாக ஏன் வெளிப்படையாக இருக்கமாட்டேன் என்கிறீர்கள்… கணினி தொழில்நுட்பம் வந்தபிறகு ஓரளவு மருத்துவ அறிவும், விழிப்புணர்வும் மக்களுக்கு வந்துள்ளது ஆனால் இன்னும் அவர்களை கிராமத்தான்கள் போல பாவித்து பேசுவது ஏன்.?

 

Readmore : Softemart Technologies

Source : dinamalar.com