உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.

உணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு

அரிசி உணவை மிகவும் குறைக்க வேண்டும். கோதுமை மற்றும் ராகியினால் செய்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.

வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒருவேளை உணவாக சாப்பிடலாம். கறிவேப்பிலை மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், உணவுடன் பூண்டையும், கறிவேப்பிலையை சட்னியாகவும் செய்து அதிகம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

விலக்க வேண்டியவை:

கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை மிகவும் குறைக்க வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும். காபி, டீ, பால் குடிக்கக் கூடாது.

வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள் முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மதுபானங்களை விலக்க வேண்டும்.

உடல் பருமனை குறைக்க பயனுள்ள சாறுகள் :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு கீழ்கண்டவைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடிக்கவும் அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளென மாற்றிக் குடித்து வரலாம். இதனால் விரைவில் உடல் பருமனை குறைக்க முடிகிறது.

1. ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தேனும், அரை எலுமிச்சை பழசாற்றையும் கலந்து குடிக்க வேண்டும்.

2. ஒரு தம்ளர் கேரட் சாறில் 10 மிளகை பொடி செய்து கலந்து குடிக்க வேண்டும். மாலையில் கொள்ளு என்ற தானியத்தினால் தயாரித்த சூப்பை ஒரு தம்ளர் குடிக்க வேண்டும்.

3. கருணைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கருணைக்கிழங்கு பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் பருமனை குறைக்கச் சில பயனுள்ள குறிப்புகள்:

* எப்போதும் நமக்குத் தேவையான அளவை விட சிறிது குறைத்து சாப்பிட வேண்டும்.

* தினமும் உணவை உட்கொள்வதற்கு 10 நிமிடம் முன்பாக இரண்டு தம்ளர் இளஞ்சூடான நீரைக் குடிப்பதால், குறைந்தளவு உணவை சாப்பிட துணை புரிகிறது.

* பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.

* ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது.

* ஆகாரம் உட்கொண்டவுடன் அதிகமாக நீரை குடிக்கக் கூடாது. இதனால் தொந்தி வயிறு அதிகமாகும்.

* உணவு உட்கொள்வதற்கு முன்பு வயிறு எந்த அளவுக்கு விரிந்து இருக்கிறதோ, அதே அளவு உணவு உட்கொண்ட பிறகும் இருக்க வேண்டும்.

* வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.